ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் புனித நீர் எடுத்து திருமஞ்சனம் நடைபெற்றது


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் புனித நீர் எடுத்து திருமஞ்சனம் நடைபெற்றது
x
தினத்தந்தி 28 Jun 2018 4:00 AM IST (Updated: 28 Jun 2018 3:05 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது.இதையொட்டி தங்க,வெள்ளிக்குடங்களில் புனித நீர் எடுத்து வந்து திருமஞ்சனம் நடைபெற்றது.

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஜேஷ்டாபிஷேகம் விழா முக்கியமான ஒன்றாகும். ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி நேற்று காலை 6 மணிக்கு கருடமண்டபத்தில் இருந்து திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு வந்தனர். அங்கு கோவில் வழக்கப்படி கோவில் அதிகாரிகள், பணியாளர்கள், மிராசுதாரர்களுக்கு மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர் காவிரி ஆற்றில் 1 தங்ககுடம், 28 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது. அங்கிருந்து 7 மணிக்கு தங்கக்குடத்தில் உள்ள புனிதநீர் யானை மீது வைத்தும் 28 வெள்ளிக்குடங்களை தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க புனிதநீர் ஊர்வலமாக அம்மாமண்டபம் ரோடு, ராஜகோபுரம் வழியாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டு அவை உற்சவ நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியாருக்கு நேற்று காலை 9.30 மணியளவில் திருமஞ்சனம் நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் கோவிலில் மூலவர் ரெங்கநாதருக்கு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் எதுவும் செய்யப்படுவதில்லை. அவரது திருமேனி சுதையினால் செய்யப்பட்டதால் அரியவகை மூலிகைகளில் இருந்து கோவில் ஊழியர்களால் தயாரிக்கப்படும் மணமிக்க தைலத்தை பெரிய பெருமாள் மீது பூசப்படும். 48 நாட்களுக்கு பிறகு இந்த தைலம் உலர்ந்த பின் தான் பெரிய பெருமாளின் திருமேனியை முழுமையாக தரிசிக்க முடியும். அதுவரை பெரிய பெருமாளின் திருமேனியில் முகத்தை மட்டும் தரிசிக்க முடியும். மற்ற பகுதிகள் மெல்லிய துணியால் போர்த்தப்பட்டிருக்கும்.

மூலவர் பெரிய பெருமாளுக்கு பதிலாக உற்சவர் நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியார்களுக்கும் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. தைலக்காப்பு அன்று பெரியபெருமாள், நம்பெருமாள், உபயநாச்சியார் ஆகியோர் மேனிகளில் அணிவிக்கப்படும் திருஆபரணங்கள் அனைத்தும் உடனடியாக பழுது பார்க்கப்படும் பணி, எடைகள் சரிபார்க்கும் பணியும் நடைபெற்றது.

ஜேஷ்டாபிஷேகத்தின் மறுநாளான இன்று (வியாழக் கிழமை) திருப்பாவாடை எனப்படும் தளிகை நிகழ்ச்சி நடைபெறும். அப்போது மூலஸ்தானத்துக்கு எதிரே உள்ளே மண்டபத்தில் தரையில் விரிக்கப்பட்ட துணியில் பெருமளவில் குவிக்கப்படும் அன்ன பிரசாதத்தில் பலாச்சுளை, தேங்காய், மாங்காய், வாழைப்பழம், நெய் உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்ட சாதத்தை பெரிய பெருமாளுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள். கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். 

Next Story