ரஷ்யாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக அங்கீகரிக்கப்பட்ட கால்பந்தை எடுத்து சென்ற கோத்தகிரி சிறுமி


ரஷ்யாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக அங்கீகரிக்கப்பட்ட கால்பந்தை எடுத்து சென்ற கோத்தகிரி சிறுமி
x
தினத்தந்தி 28 Jun 2018 4:30 AM IST (Updated: 28 Jun 2018 3:29 AM IST)
t-max-icont-min-icon

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கால்பந்தை எடுத்து செல்லும் “பால் கேரியராக“ கோத்தகிரியைச் சேர்ந்த சிறுமி பங்கேற்றார். இந்த அரிய வாய்ப்பினை பெற்றதற்காக பாராட்டுக்கள் குவிகின்றன.

கோத்தகிரி,

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் கடந்த 14–ம் தேதி முதல் நடைப்பெற்று வருகிறது. இதன் “இ“ பிரிவு போட்டியில் கடந்த 22–ம் தேதி உலக புகழ்பெற்ற பிரேசில் மற்றும் கோஸ்டாரிகா நாடுகள் விளையாடின. இந்த போட்டியில் விளையாட பயன்படுத்தும் உலக கால்பந்து சங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட கால்பந்தை நட்சத்திர கால்பந்து வீரர்கள் மற்றும் நடுவர்களுடன் சுமந்து செல்லும் வாய்ப்பு கோத்தகிரியைச் சேர்ந்த 6–ம் வகுப்பு மாணவி நதானியாவிற்கு கிடைத்தது. இதன் காரணமாக உலக கோப்பை போட்டியில் அங்கீகரிக்கப்பட்ட கால்பந்தை எடுத்து சென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையையும் அவர் தட்டிச் சென்றார். இந்த பெருமையான சம்பவம் குறித்து நதானியா கூறியதாவது:–

உலக கோப்பை கால்பந்து போட்டியில் அங்கீகரிக்கப்பட்ட பந்தை எடுத்துச் செல்லும் வாய்ப்பிற்காக இந்தியா முழுவதிலிருந்தும் 1600–க்கும் மேற்பட்ட 10 முதல் 14 வயதிற்குட்பட்ட கால்பந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் சிறப்பாக செயல்பட்ட 50 பேர்களில் இறுதியாக இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி இருவரை மட்டும் தேர்வு செய்தார். இந்த தேர்வில் கால்பந்து விளையாட்டுக்£ன தனி திறமைகள், பெனால்டி ஷாட் அடிக்கும் திறன் மற்றும் பல்வேறு தகுதிகள் அடிப்படையிலான சோதனைகள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தியாவில் பெரும்பாலும் பெண்கள் கால்பந்தில் ஆர்வம் குறைந்து வரும் நிலையில் உள்ளுர் மற்றும் வெளியூர்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கால்பந்து முகாமில் பயிற்சி பெற்றதாலும் இந்த வாய்ப்பை எளிதில் என்னால் பெற முடிந்தது. எனக்கு கிடைந்த இந்த அங்கீகாரத்தின் மூலம் பெண்கள் எதிர்காலத்தில் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்ட தொடங்க வாய்ப்பு ஏற்படும் என்கிற நம்பிக்கை உள்ளது. உலக புகழ்பெற்ற நட்சத்திர ஆட்டக்காரர்களான பிரேசிலை சேர்ந்த நெய்மர், காட்டினோ, மார்சிலோ, கெய்லர் நவாஸ் ஆகியோரை நேரில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த “பால் கேரியர்களாக“ பணியாற்ற மொத்தம் 64 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தமிழ்நாடு கோத்தகிரியைச் சேர்ந்த 11–வயது மாணவி நதானியா மற்றும் கர்நாடகா–வைச் சேர்ந்த 10 வயது மாணவன் ரிஷி ஆகியோர் இந்தியாவிலிருந்து முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலேயே முதல் முறையாக உலக கோப்பை கால்பந்து போட்டியில் “பால் கேரியராக“ பணியாற்றி விட்டு கோத்தகிரி திரும்பிய மாணவி நதானியாவிற்கு பொதுமக்களிடமிருந்தும். சமூக ஆர்வலர்கள் மற்றும் கால்பந்து ஆர்வலர்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.


Next Story