வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வட்டார போக்குவரத்து அதிகாரி உள்பட 17 பேர் மீது வழக்கு


வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வட்டார போக்குவரத்து அதிகாரி உள்பட 17 பேர் மீது வழக்கு
x

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மதுரை வட்டார போக்குவரத்து அதிகாரி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை,

கனரக வாகனம் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக பேட்ஜ் லைசென்ஸ் போட்டால் தான் அந்த வாகனத்தை ஓட்ட முடியும். அந்த லைசென்ஸ் எடுப்பதற்கு கண்டிப்பாக 8–ம் வகுப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

அவ்வாறு படிக்காதவர்கள் போலியாக பள்ளி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து லைசென்ஸ் பெற்று வருவதாக புகார்கள் எழுந்தன. இவ்வாறு லைசென்ஸ் பெறுபவர்கள் ஓட்டுநர் பயிற்சி பள்ளி மூலமாகத் தான் லைசென்ஸ் வாங்கி வருவதாகவும், அவர்கள் தான் போலி சான்றிதழ்களை வாங்கி கொடுப்பதாகவும் தெரியவந்தது.

இதில் மதுரை வடக்கு வட்டார அலுவலகத்தில் அதிக ஊழல் நடைபெற்று உள்ளதாக மதுரையை சேர்ந்த செந்தில்கண்ணன் என்பவர் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரில், ‘‘மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 2015, 2016–ம் ஆண்டுகளில் 6 ஆயிரத்து 777 பேருக்கு பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. அதில் போலியான மாற்றுச்சான்றிதழ், பள்ளிச்சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு பேட்ஜ் வழங்கியுள்ளனர். இதற்காக அவர்கள் ஒவ்வொருவரும் ரூ.15 முதல் 20 ஆயிரம் வரை லஞ்சம் கொடுத்துள்ளனர். இதனை வட்டார போக்குவரத்து அதிகாரி, வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர், தனியார் பள்ளி முதல்வர், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் என அனைவருக்கும் பிரித்துக்கொண்டனர். இவ்வாறு அவர்கள் மொத்தம் 10 கோடியே 16 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளனர்’’ என்று கூறியிருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் புகார் தெரிவித்த காலக்கட்டத்தில் 712 பேரின் சான்றிதழ்களை ஆய்வு செய்யாமல் பேட்ஜ் வழங்கியது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார், மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரியாக இருந்த கல்யாண்குமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள், தனியார் பள்ளி முதல்வர், ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் உள்பட 17 பேர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story