தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்து மாவட்டத்தில், 3 இடங்களில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்து மாவட்டத்தில், 3 இடங்களில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Jun 2018 4:30 AM IST (Updated: 29 Jun 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்து பா.ம.க.வினர் சேலம் மாவட்டத்தில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்,

சமூக நீதி போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதாகவும், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோரை அவதூறாக பேசியதாகவும் கூறி, பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை கண்டிப்பதுடன், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பா.ம.க.வினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, பா.ம.க. சார்பில் ஓமலூர் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாவட்ட தலைவர் டாக்டர் மாணிக்கம் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு துணை செயலாளர் பாபு, தேர்தல் பணிக்குழு தலைவர் சதாசிவம், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு, தமிழிசை சவுந்தரராஜனின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பேசினர்.

இதில் மாவட்ட பொருளாளர் பரமேஷ்வரி, துணைத்தலைவர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகர், மாதேஷ், தனசேகரன், பச்சியப்பன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மேட்டூரில் இதே கோரிக்கையை வலியுறுத்தி சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் மேட்டூர் தாலுகா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். சிறப்பு மாவட்ட செயலாளர் வெடிக்காரனூர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். மாநில துணைத்தலைவர் சதாசிவம் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட துணைத்தலைவர் மதியழகன், மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன், மேச்சேரி ராஜா, முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் தமிழ்வாணன், மயில்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், சேலம் தெற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் எடப்பாடி தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ரவி, மாவட்ட அமைப்பு செயலாளர் பாலசுப்பிரமணியம், மாவட்ட தலைவர் அப்பு நாடார், துணைத்தலைவர்கள் மகேந்திரன், ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் குமாரசாமி, தொகுதி அமைப்பு செயலாளர் நடேசன், இருப்பாளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள் தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். முடிவில் நகர தலைவர் வடிவேல் நன்றி கூறினார். 

Next Story