மாணவிக்கு நீட் தேர்வு பயிற்சி அளிப்பதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி ஆந்திரா ஆசிரியர் கைது


மாணவிக்கு நீட் தேர்வு பயிற்சி அளிப்பதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி ஆந்திரா ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 29 Jun 2018 4:30 AM IST (Updated: 29 Jun 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோடு அருகே மாணவிக்கு நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த ஆந்திரா ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

எலச்சிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே செயல்பட்டு வரும் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் வரகூராம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி படித்து வந்தார். அந்த பள்ளியில் நீட் தேர்விற்கு பயிற்சி அளிப்பவராக கடந்த ஆண்டு ஆந்திரா மாநிலம் கர்ணூல் மாவட்டம் கொண்டாரெட்டி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 34) என்பவர் வேலைபார்த்தார். அவர், மாணவியின் பெற்றோரிடம் மாணவிக்கு தனியாக நீட் தேர்விற்கான சிறப்பு பயிற்சியை தான் வழங்குவதாக கூறினார். மாணவி நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவார் என்றும், தமிழக அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்க வழிவகை செய்வதாகவும் நாகராஜ் உறுதி கூறியுள்ளார். இதற்காக தனக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

இதனை நம்பிய மாணவியின் பெற்றோர் நாகராஜிற்கு ரூ.2 லட்சம் வழங்கியதாக தெரிகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட நாகராஜ் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை கூட்டப்பள்ளி பகுதியில் நாகராஜ் நின்று கொண்டிருப்பதை அந்த வழியாகச் சென்ற மாணவியின் தாய் பார்த்துள்ளார். உடனே அங்கு சென்ற அவர் நாகராஜிடம் பணத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் தாயை தாக்கி, கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

இதுகுறித்து மாணவியின் தாய் திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அப்போது கூட்டப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே மறைந்திருந்த நாகராஜை போலீசார் கைது செய்தனர். பணம் மோசடி, பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

கைதான நாகராஜ் திருச்செங்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். 

Next Story