பிரபல ரவுடி கொலை வழக்கில் கைதான 6 பேர் சிறையில் அடைப்பு


பிரபல ரவுடி கொலை வழக்கில் கைதான 6 பேர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 29 Jun 2018 4:00 AM IST (Updated: 29 Jun 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அருகே பிரபல ரவுடி கொலை வழக்கில் கைதான 6 பேரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

பெரம்பலூர்,

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா விஸ்வாம்பாள் சமுத்திரத்தை சேர்ந்தவர் கருப்பையா மகன் தேஜா என்கிற பாஸ்கர்(வயது 30). பிரபல ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், பெரம்பலூர் அருகே எளம்பலூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி பகுதியில் நேற்று முன்தினம் மதியம் பாஸ்கர் உடலில் பலத்த வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

பெரம்பலூர் போலீசார், பாஸ்கரை கொலை செய்தவர்களை வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பாக 5 பேர் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு சரண் அடைந்தனர்.

இதையறிந்த பெரம்பலூர் போலீசார் அங்கு சென்று, 5 பேரையும் பெரம்பலூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் பெரம்பலூர் அருகே உள்ள அம்மாபாளையத்தை சேர்ந்த பெருமாள் மகன் அழகிரி(33), பெரம்பலூர் மேட்டுத்தெருவைச் சேர்ந்த ராமநாதன் மகன் சசிதரன்(25), துறைமங்கலம் கே.கே.நகரைச் சேர்ந்த நாராயணன் மகன் கபிலன்(22), சார்லஸ் மகன் வினோத்(23), பெரம்பலூர் நிர்மலா நகரை சேர்ந்த குமார் மகன் நீலகண்டன்(23) என்பது தெரியவந்தது.

மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் ஆலம்பாடி சாலையில் உள்ள அங்காளம்மன் கோவில் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்ட ரவுடி பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் பாஸ்கர். அவர் அழகிரியை கொலை செய்ய முயன்றுள்ளார். இதையறிந்த, அழகிரி உள்ளிட்ட 5 பேரும் சம்பவத்தன்று இரவு விஸ்வாம்பாள் சமுத்திரம் கிராமத்துக்கு காரில் சென்று, பாஸ்கரை எளம்பலூர் பெரிய ஏரிக்கு அழைத்து வந்து, அங்கு அவரை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக அம்மாபாளையத்தை சேர்ந்த வினோத்(32) என்பவர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகிரி, சசிதரன், கபிலன், வினோத், நீலகண்டன், மற்றொரு வினோத் ஆகிய 6 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

Next Story