பயணிகள் நிழற்குடைக்குள் கார் புகுந்ததில் 2 விவசாயிகள் பலி; 4 பேர் காயம்


பயணிகள் நிழற்குடைக்குள் கார் புகுந்ததில் 2 விவசாயிகள் பலி; 4 பேர் காயம்
x
தினத்தந்தி 29 Jun 2018 4:30 AM IST (Updated: 29 Jun 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

திருமானூர் அருகே பயணிகள் நிழற்குடைக்குள் கார் புகுந்ததில் பஸ்சுக்காக காத்திருந்த 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள வாரணவாசி கிராமத்தில் தஞ்சாவூர்- அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பயணிகள் நிழற்குடையில் நேற்று காலை சிலர் பஸ்சுக்காக காத்திருந்தனர். இந்நிலையில் திருமானூர் அருகே உள்ள சேனாபதி கிராமத்தை சேர்ந்த பிரபாகர் என்பவருக்கு சொந்தமான கார், திருவண்ணாமலையில் இருந்து சேனாபதிக்கு வந்து கொண்டிருந்தது.

வாரணவாசி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, பயணிகள் நிழற்குடைக்குள் புகுந்து, அங்கிருந்த பயணிகள் மீது மோதி கவிழ்ந்தது.

இதில் நிழற்குடையில் அமர்ந்திருந்த வாரணவாசி கிராமத்தை சேர்ந்த விவசாயிகளான மருதமுத்து(வயது 70), இளங்கோவன்(50) ஆகியோர் காரின் அடியில் சிக்கி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், வாரணவாசியை சேர்ந்த கொளஞ்சி(45), திருநாவுக்கரசு(48), சாமிநாதன்(35), மருதமுத்துவின் பேரன் விக்ரமதி(14) ஆகிய 4 பேர் காயமடைந்தனர்.

முன்னதாக கார் தாறுமாறாக வருவதை கண்டு, நிழற்குடையில் நின்று கொண்டிருந்த சில பயணிகள் அங்கிருந்து அலறியடித்தபடி ஓடினர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்தை தொடர்ந்து கார் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். காரில் பயணம் செய்த 2 பேர் பொதுமக்கள் தங்களை தாக்கிவிடுவார்களோ என்ற அச்சத்தில் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சாமிநாதன் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மருதமுத்து, இளங்கோவன் ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கார் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த விபத்தில் காயமடைந்த விக்ரமதி ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரை பள்ளிக்கு பஸ்சில் ஏற்றி வழியனுப்பவே மருதமுத்து வந்துள்ளார். இந்நிலையில் கார் மோதி விக்ரமதி கண்முன்ணே மருதமுத்து பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story