பழங்கால உணவு முறையை மக்கள் பின்பற்ற வேண்டும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு


பழங்கால உணவு முறையை மக்கள் பின்பற்ற வேண்டும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு
x
தினத்தந்தி 29 Jun 2018 5:22 AM IST (Updated: 29 Jun 2018 5:22 AM IST)
t-max-icont-min-icon

நோய்கள் வராமல் பாதுகாத்துக்கொள்ள பழங்கால உணவு முறையை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.

பெங்களூரு,

பெங்களூரு ஓசூர் ரோட்டில் மாநில அரசின் கித்வய் புற்றுநோய் மருத்துவமனை அமைந்துள்ளது. அங்கு ரூ.120 கோடி செலவில் நவீன மருத்துவ வசதிகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிட திறப்பு விழா நேற்று அங்கு நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசியதாவது:-

நாட்டில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 12½ சதவீதம் பேர் மட்டுமே ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்கு வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 10 லட்சம் புற்றுநோயாளிகள் இருப்பது கண்டறியப்படுகிறது. நாட்டில் புற்றுநோயுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் பேர் மரணம் அடைகிறார்கள்.

இதற்கு விழிப்புணர்வு குறைவாக இருப்பதே முக்கிய காரணம். 2020-ம் ஆண்டுக்குள் புதிதாக கண்டுபிடிக்கப்படும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 17.3 லட்சமாக உயரும். இந்த நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை 8.8 லட்சமாக அதிகரிக்கும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் மதிப்பிட்டுள்ளது.

பெண்களிடம் மார்பு புற்றுநோய் சாதாரணமாக இருக்கிறது. ஆண்களை வாய் புற்றுநோய் அதிகமாக தாக்குகிறது. இந்திய மருத்துவ கவுன்சிலின் தேசிய புற்றுநோய் பதிவுத்துறையில் உள்ள தகவலின்படி ஆண்களில் 15 பேரில் ஒருவருக்கும், பெண்களில் 12 பேரில் ஒருவருக்கும் புற்றுநோய் தாக்குகிறது.

அதனால் புற்றுநோய் பற்றி மத்திய-மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை சவாலாக ஏற்று செயல்பட வேண்டும். அதாவது மாசுபாடு, உடல் பருமன், புகையிலை, வெற்றிலை பாக்கு, மதுபானத்தின் பாதிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். தேவையற்ற உணவுகளை(ஜங்புட்) சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவையெல்லாம் தான் புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது. மக்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் உடல் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மத்திய-மாநில அரசுகள் திட்டங்களை அமல்படுத்தினால் மட்டும் போதாது. அதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உடல் உழைப்பு குறைந்துவிட்டதால் நோய்கள் வருவது அதிகரித்துவிட்டது. நமது மக்கள் பழங்கால உணவு முறையை பின்பற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் நோய்கள் வராமல் நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். மனரீதியாக அதிகமாக உழைப்பவர்கள் உடல் உழைப்பை அலட்சியப்படுத்துவதால் நோய் தாக்குதல் அதிகரிக்கிறது. புற்றுநோய் குணப்படுத்தக்கூடியது தான். ஆரம்ப கட்டத்திலேயே அதை கண்டறிந்து உரிய சிகிச்சை பெற்றால் அவற்றில் இருந்து விடுபட முடியும்.

பள்ளி-கல்லூரிகளில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டியது அவசியம். வாழ்க்கை முறையை இளம் சமுதாயத்தினர் மாற்றிக்கொள்ள வேண்டும். நடைபயிற்சி போன்ற உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும். கிராமப்புறங்களிலும் புற்றுநோய் குறித்த விவரங்களை அளிக்கும் மையங் களை தொடங்க வேண்டும்.

நவீன வாழ்க்கை முறையும் உடல் சுகாதாரத்தை பாதிப்படைய செய்கிறது. நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கனிவான அணுகுமுறையுடன் சிகிச்சை அளிக்க வேண்டும். நோயாளிகளிடம் கனிவாக பேசுவது அவர்களின் வலியை போக்கிவிடும்.

இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.

இதில் கவர்னர் வஜூபாய் வாலா பேசுகையில், “புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதில் கித்வய் மருத்துவமனை நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது. இங்கு 7 ரேடியேசன் மருத்தவ எந்திரங்கள் உள்ளன. சுகாதாரத்துறைக்கு 100 சதவீத நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சுகாதார வசதிக்கு மாநில அரசு சிறப்பான முறையில் திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன“ என்றார்.

இந்த விழாவில் முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மருத்துவ கல்வித்துறை மந்திரி டி.கே.சிவக்குமார், சுகாதாரத்துறை மந்திரி சிவானந்தபட்டீல் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவை முடித்துக் கொண்டு வெங்கையா நாயுடு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவரை கவர்னர் வஜூபாய் வாலா வழியனுப்பி வைத்தார்.


Next Story