குப்பையை அகற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைத்தொகை வழங்க நடவடிக்கை


குப்பையை அகற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைத்தொகை வழங்க நடவடிக்கை
x
தினத்தந்தி 29 Jun 2018 5:36 AM IST (Updated: 29 Jun 2018 5:36 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் குப்பையை அகற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி கூட்டத்தில் இணை கமிஷனர் தெரிவித்தார்.

பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சி கூட்டம் மேயர் சம்பத்ராஜ் தலைமையில் பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள மன்ற கூட்ட அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துணை மேயர், கமிஷனர், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் கூட்டம் தொடங்கியதும், எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி எழுந்து பேசுகையில், “மக்கள் பிரதிநிதிகளின் அதிகார எல்லை என்ன என்பது குறித்து இங்கே விவாதிக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் நகராட்சி சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரம் வருவாய்த்துறைக்கு சொந்தமான வீட்டுமனைகளை போன்றது ஆகும். வருவாய்த்துறை வீட்டுமனைகளுக்கு பட்டா கூட கிடைக்காது. அதுபோல தான் மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரமும் உள்ளது. எனவே மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய அதிகாரம் வழங்க ஒரு துணைக்குழுவை அமைத்து ஆய்வு செய்து, அதை அரசுக்கு அனுப்ப வேண்டும்” என்றார். இதை ஏற்க மேயர் சம்பத்ராஜ் மறுத்துவிட்டார்.

தொடர்ந்து பேசிய பத்மநாபரெட்டி, “மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிக அதிகாரம் இருந்தால், அது ஜனநாயகத்திற்கு அலங்காரம் செய்வது போல் இருக்கும். இதுகுறித்தும் விவாதித்து ஒரு முடிவு எடுக்க வேண்டும். கணக்கு குழு இதுவரை ஒரு கூட்டத்தை கூட கூட்டவில்லை. இந்த கணக்கு குழு மாதந்தோறும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் ஆனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அந்த குழு அறிக்கை தயாரித்து வழங்கவில்லை“ என்றார்.

சில உறுப்பினர்கள் எழுந்து குப்பை கொட்டி கிடப்பது குறித்து பிரச்சினை கிளப்பி பேசினர். அதற்கு பதிலளித்த சுகாதாரம் மற்றும் திடக்கழிவு பிரிவு இணை கமிஷனர் சர்பிராஸ்கான், “குப்பையை அகற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் பட்டுவாடா பாக்கி உள்ளது. அதனால் குப்பையை அகற்றும் ஆட்டோக்கள் மற்றும் டிப்பர் லாரிகள் அந்த பணியில் ஈடுபடாமல் உள்ளன. ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைத்தொகையை பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமாக 72 டிப்பர் லாரிகள் உள்ளன. இதில் 15 லாரிகள் பழுதாகி பணிமனையில் இருக்கிறது. மீதமுள்ள லாரிகள் குப்பையை ஏற்றி செல்லும் பணியை செய்து வருகிறது” என்றார்.

அதைத்தொடர்ந்து பேசிய மேயர் சம்பத்ராஜ், “பெங்களூருவில் 16 ஆயிரம் துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு மாதந்தோறும் குறித்த தேதியில் சம்பளம் வழங்கப்படுகிறது. அவர்களில் சுமார் 600 பேர் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டியுள்ளது. அவர்களின் பணியையும் ஒழுங்குமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

அதைத்தொடர்ந்து பேசிய பா.ஜனதா கவுன்சிலர் உமேஷ்ஷெட்டி, “ரூ.56 கோடி செலவில் குப்பைகள் கொட்டப்படும் பகுதிகளில் நவீன குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டன. ஆனால் அவற்றின் பயன்பாடு குறைவாக உள்ளது. அந்த தொட்டி இருந்தும் அவற்றை அதிகாரிகள் சரியான முறையில் பராமரிக்காமல் உள்ளனர். இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதற்கு பதிலளித்த மேயர் சம்பத்ராஜ், “சில பகுதிகளில் உயர் மின் அழுத்த வயர்கள் போகிறது. அதுபோன்ற இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தாலும், அங்கு குப்பை தொட்டி வைக்க முடியாது. அதனால் அதிகாரிகள் அங்கு இருந்து வேறு இடத்தில் குப்பை தொட்டியை வைத்திருப்பார்கள். இந்த விஷயத்தில் அதிகாரிகளை குறை சொல்வது சரியல்ல“ என்றார்.

அதைத்தொடர்ந்து கவுன்சிலர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கமிஷனர் மகேஸ்வர்ராவ் பேசுகையில், “பெங்களூருவில் குப்பை பிரச்சினையை தீர்க்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. குப்பை பிரச்சினையை தீர்த்து பெங்களூருவின் நற்பெயரை பாதுகாக்க முயற்சி செய்து வருகிறோம். மக்கள் குப்பைகளை கண்ட இடங்களில் வீசிவிட்டு செல்கிறார்கள். இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். அதிக குப்பைகள் கொட்டப்படும் பகுதிகளில் குப்பை தொட்டி வைக்கப்படும். குப்பைகள் சரியாக அள்ளப்படுகிறதா? என்பதை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு உங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் ஆகும்” என்றார்.

ஜனதா தளம்(எஸ்) கவுன்சிலர் மஞ்சுளா நாராயணசாமி எழுந்து பேசும்போது, “ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் உள்ள எனது லக்கெரே வார்டில் மேற்கொள்ளப்படும் பணிகளில் 3-வது நபரின் தலையீடு உள்ளது. இதை தடுக்க வேண்டும். அந்த நபரின் தலையீட்டை நாங்கள் ஏற்கமாட்டோம். இதற்கு மேயர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது வார்டில் திட்ட பணிகளை எந்த தடங்கலும் இன்றி நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டும்“ என்றார்.

அதாவது கவுன்சிலர் மஞ்சுளா, வளர்ச்சிப் பணிகளில் 3-வது நபரின் தலையீடு இருப்பதாக மறைமுகமாக ராஜராஜேஸ்வரிநகர் தொகுதி எம்.எல்.ஏ.வான முனிரத்னாவை குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் லக்கெரே வார்டு திட்ட பணிகளில் முனிரத்னா எம்.எல்.ஏ.வின் தலையீடு உள்ளதாக கூறி பா.ஜனதா கவுன்சிலர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேயர் கேட்டுக் கொண்டதை அக்கட்சியினர் நிராகரித்துவிட்டனர். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கவுன்சிலர்கள் மட்டுமே சபையில் இருந்தனர்.


Next Story