பாளையங்கோட்டையில் துணிகரம் கிறிஸ்தவ ஆலய மாதா சிலையில் வெள்ளி கிரீடம் திருட்டு


பாளையங்கோட்டையில் துணிகரம் கிறிஸ்தவ ஆலய மாதா சிலையில் வெள்ளி கிரீடம் திருட்டு
x
தினத்தந்தி 30 Jun 2018 3:30 AM IST (Updated: 29 Jun 2018 7:58 PM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் கிறிஸ்தவ ஆலயத்தில் மாதா சிலையில் இருந்த வெள்ளி கிரீடத்தை மர்ம நபர் திருடிச் சென்று விட்டார்.

நெல்லை, 

பாளையங்கோட்டையில் கிறிஸ்தவ ஆலயத்தில் மாதா சிலையில் இருந்த வெள்ளி கிரீடத்தை மர்ம நபர் திருடிச் சென்று விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கிரீடம் திருட்டு

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. ‘பி’ காலனியில் கத்தோலிக்க கிறிஸ்தவ சகாய மாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலய வளாகத்தில் கெபியில் மாதா, குழந்தை ஏசுவுடன் நின்ற நிலையில் சிலை உள்ளது. இதில் மாதாவுக்கு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி கிரீடம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அணிவிக்கப்பட்டது. இந்த கெபி இரவு, பகல் நேரத்திலும் கிறிஸ்தவ மக்கள் வந்து வழிபடும் வகையில் கண்ணாடி கதவுகள் திறந்தே வைக்கப்பட்டு இருந்தது.

நேற்று காலை மாதா தலையில் இருந்த கிரீடம் காணாமல் போனது. இரவு நேரத்தில் ஆலய வளாகத்துக்குள் மர்ம நபர் புகுந்து கிரீடத்தை திருடிச் சென்று விட்டார். அதன் மதிப்பு ரூ.40 ஆயிரம் ஆகும்.

மர்ம நபருக்கு வலைவீச்சு

இதுகுறித்து ஆலய பங்கு தந்தை அருள் அம்புரோஸ், பெருமாள்புரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதை அறிந்த பாளையங்கோட்டை மற்றும் பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் ஆலய வளாகத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளையும் பார்த்தனர். அப்போது அதிகாலை நேரத்தில் மர்ம நபர் ஒருவர் ஆலய வளாகத்துக்குள் நுழைந்துள்ளார். அவர் கெபிக்குள் சென்று மேடையில் ஏறி மாதா தலையில் அணிவிக்கப்பட்டிருந்த கிரீடத்தை திருடிக்கொண்டு வேகமாக செல்லும் காட்சி பதிவாகி இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதுதொடர்பாக பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரீடத்தை திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.


Next Story