சிதம்பரம் அருகே தவணை தொகை கட்டாததால் டிராக்டரை நிதி நிறுவனத்தினர் எடுத்து சென்றதால் வி‌ஷம் குடித்து விவசாயி தற்கொலை


சிதம்பரம் அருகே தவணை தொகை கட்டாததால் டிராக்டரை நிதி நிறுவனத்தினர் எடுத்து சென்றதால் வி‌ஷம் குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 30 Jun 2018 5:45 AM IST (Updated: 30 Jun 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அருகே புதிதாக வாங்கிய டிராக்டரை நிதி நிறுவனத்தினர் எடுத்து சென்றதால், வி‌ஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

சிதம்பரம்,

சிதம்பரம் அடுத்த காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கருணாகரநல்லூரை சேர்ந்தவர் தமிழரசன்(வயது 45). விவசாயி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கீரப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் உதவி பெற்று, புதிதாக டிராக்டர் ஒன்றை வாங்கினார். இதற்கு மாத தவணையாக, அந்த நிதி நிறுவனத்தில் தமிழரசன் பணத்தை கட்டி வந்தார்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தமிழரசனால் தவணை தொகையை சரியாக கட்ட முடியாமல் போனதாக தெரிகிறது. தொடர்ந்து அந்த நிறுவனத்தினர், தவணை தொகையை உடனே செலுத்துங்கள் என்று அவருக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம், அந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் தமிழரசன் வீட்டுக்கு சென்று, டிராக்டரை எடுத்து சென்றுவிட்டனர். இதனால் தமிழரசன் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளானார். தவணை தொகையை தன்னால் கட்ட முடியவில்லையே என வேதனையில், அருகில் உள்ள வயலுக்கு சென்றார். அங்கு அவர் வி‌ஷத்தை எடுத்து குடித்ததாக தெரிகிறது. இதில் மயங்கிய நிலையில் நிலத்தில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை அவர் உயிரிழந்தார். வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட தமிழரசனுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில், தமிழரசன் உயிரிழந்தது பற்றி அறிந்த விவசாய சங்கத்தினர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் என்று அனைவரும் ஒன்று திரண்டு சிதம்பரம் கஞ்சிதொட்டி முனை பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.

இந்நிலையில் விவசாயிகள் திடீரென நிதி நிறுவனத்தின் கதவை(‌ஷட்டர்) இழுத்து பூட்டினர். இதனால் உள்ளே இருந்த ஊழியர்கள் அனைவரும் வெளியே வர முடியாமல் தவிப்புக்கு உள்ளானார்கள். இதற்கிடையே போராட்டம் பற்றி அறிந்த சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தவணை தொகையை கட்டுவதற்கு காலக்கெடு கொடுத்திருக்க வேண்டும், ஆனால் அந்த நிறுவனம் அவ்வாறு செய்யாததால் தான் தமிழரசன் உயிரிழந்துள்ளார். எனவே அவரது சாவுக்கு அந்த நிதி நிறுவனமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும், மேலும் அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும், சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையேற்று, விவசாயிகள் நிறுவனத்தின் கதவை திறந்தனர். தொடர்ந்து போலீசார் நிதிநிறுவன ஊழியர்களிடம் பேசிய போது, அவர்கள் தமிழரசனுக்கு கடன் உதவி அளித்த நிதி நிறுவனத்துக்கும், எங்களது நிதி நிறுவனத்துக்கும் தொடர்பு இல்லை. அதன் தலைமை அலுவலகம் திருவண்ணாமலையில் இருப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த நிறுவனத்தின் அதிகாரிகளை போலீசார் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். பின்னர் இந்த பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகளிடம் போலீசார் தெரிவித்தனர். இதையேற்று அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story