பழனி அருகே வீடுகளில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த தம்பதி உள்பட 4 பேர் கைது


பழனி அருகே வீடுகளில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த தம்பதி உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 30 Jun 2018 3:30 AM IST (Updated: 30 Jun 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே, வீடுகளில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த தம்பதி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் கஞ்சா வாங்குவதற்காக வந்த கேரளாவை சேர்ந்த 2 பேரும் போலீசாரிடம் சிக்கினர்.

நெய்க்காரப்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பாப்பம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது பாப்பம்பட்டி காமராஜர் ரோட்டை சேர்ந்த செந்தில்குமார் (வயது 40), அவருடைய மனைவி ஜெயபிரதா (34) ஆகியோர் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த மனோகர் (53) என்பவரையும் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்றதாக கூறி போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கஞ்சாவை வாங்குவதற்காக கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சுவாதிக் (25), லால்கிருஷ்ணன் (23) ஆகியோர் பாப்பம்பட்டிக்கு வந்திருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. பாப்பம்பட்டியில் பதுங்கி இருந்த அந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் பாப்பம்பட்டி முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாப்பாத்தி (60) என்பவர் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைதான 4 பேரிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story