கல்லூரி விடுதியில் பதுக்கி வைத்திருந்த 7 டன் அரிசி பறிமுதல்


கல்லூரி விடுதியில் பதுக்கி வைத்திருந்த 7 டன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 30 Jun 2018 4:00 AM IST (Updated: 30 Jun 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணி கல்லூரி விடுதியில் பதுக்கி வைத்திருந்த 7½ டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

திருத்தணி,

திருத்தணி அரசு கலை கல்லூரியில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி கல்லூரி அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது. இந்த விடுதியில் 100-க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். இவர்களுக்காக அரசு சார்பில் அரிசி மற்றும் பருப்பு வகைகள் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த விடுதியில் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைதொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் திருத்தணி ஆர்.டி.ஓ. பவநந்தினி, திருத்தணி தாசில்தார் நரசிம்மன் ஆகியோர் வருவாய் துறை அலுவலர்களுடன் அந்த விடுதியில் திடீர் ஆய்வு நடத்தினர்.

அப்போது அங்குள்ள ஒரு அறையில் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

நேற்று மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன், மண்டல மேலாளர் வசந்தி, திருத்தணி வட்டவழங்கல் அலுவலர் பாரதி (பொறுப்பு) மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7½ டன் அரிசியை பறிமுதல் செய்து அவற்றை திருத்தணியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் தற்போதைய வார்டன் ராஜபாண்டியன் மற்றும் விடுதியின் சமையல்காரர் செல்வராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

அரிசி பதுக்கல் விவகாரத்தில் இதற்கு முன்னால் இங்கு பணி புரிந்த விடுதியின் வார்டன் பழனி என்பவர் காரணம் என அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து தற்போது ஆர்.கே.பேட்டையில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதி வார்டனாக இருக்கும் பழனி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Next Story