சேலத்தில் கல்லூரி மாணவர் மர்ம சாவு : பெற்றோர் முற்றுகை போராட்டம்


சேலத்தில் கல்லூரி மாணவர் மர்ம சாவு : பெற்றோர் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 30 Jun 2018 4:45 AM IST (Updated: 30 Jun 2018 3:25 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் கல்லூரி மாணவர் மர்மமான முறையில் இறந்தார். சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

சேலம்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கோனேரிபட்டியை சேர்ந்தவர் யுவராஜ். இவரது மகன் கவுதம் (வயது 26). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். இதற்கான கல்லூரி விடுதியிலேயே தங்கி இருந்தார். இந்த நிலையில் மாணவர் கவுதம் நேற்று மர்மமான முறையில் இறந்து போனார். இதைத்தொடர்ந்து அவரது பிணம் நேற்று ஆம்புலன்ஸ் வேன் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர். பின்னர் கவுதம் பிணத்தை பார்த்து கதறி அழுதனர். இந்த நிலையில் மாணவர் பிணத்தை அரசு ஆஸ்பத்திரி பிணவறைக்கு கொண்டு செல்ல அங்கிருந்து ஆம்புலன்ஸ் புறப்பட தயாரானது. அப்போது கவுதம் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆம்புலன்ஸ் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து மாணவரின் பெற்றோர் கூறும்போது, கவுதமிற்கு வயிற்றுவலி என்று கூறி எங்களுக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து கல்லூரிக்கு சென்றோம். அப்போது சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி உள்ளோம் என்று கூறினர். இதைத்தொடர்ந்து இங்கு வந்து பார்த்த போது மகன் பிணமாக ஆம்புலன்ஸ்சில் கிடக்கிறான்.

எனவே எனது மகன் சாவில் சந்தேகம் உள்ளது. நண்பர்களுடன் சேர்ந்து கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி இறந்து போனான் என்று போலீசார் கூறுகின்றனர். எனது மகன் கிணற்றில் இறங்கி இருக்க மாட்டான். அப்படியும் கிணற்றி இறங்கி நீரில் மூழ்கி இறந்து போனால் வயிறு வீங்கி இருக்கும். அவ்வாறு எதுவும் இல்லை. எனவே மகன் சாவு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினர்.

இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் கூறும் போது மாணவர் கவுதம் தனது நண்பர்கள் சிலருடன் நேற்று கல்லூரி அருகே உள்ள ஒரு கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது நீரில் மூழ்கி இறந்துள்ளார். இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கவுதம் பிணம் மீட்கப்பட்டது.

அதன்பிறகு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது என்று கூறினர். இந்த சம்பவத்தால் நேற்று நள்ளிரவு வரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story