மலைக்கோடியில் வேகத்தடை அமைக்கக்கோரி சாலை மறியல்


மலைக்கோடியில் வேகத்தடை அமைக்கக்கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 30 Jun 2018 5:01 AM IST (Updated: 30 Jun 2018 5:01 AM IST)
t-max-icont-min-icon

மலைக்கோடியில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது.

அடுக்கம்பாறை,

வேலூரை அடுத்த மலைக்கோடியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதனால் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேகத்தடை அகற்றப்பட்டது.

பள்ளி மாணவ- மாணவிகள், முதியவர்கள் சாலையை கடக்கும் போது விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, வேகத்தடை அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் இதுவரை வேகத்தடை அமைக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று மலைக்கோடி, அரியூர் சந்திப்பில் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், அரியூர் சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியவர்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதிலளித்த போலீசார் அதிகாரிகளிடத்தில் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதைத்தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story