அதிக பாரத்துடன் செல்லும் லாரிகளால் சாலை சேதம்: பொதுமக்கள் திடீர் மறியல் எம்.எல்.ஏ. பங்கேற்பு


அதிக பாரத்துடன் செல்லும் லாரிகளால் சாலை சேதம்: பொதுமக்கள் திடீர் மறியல் எம்.எல்.ஏ. பங்கேற்பு
x
தினத்தந்தி 1 July 2018 4:30 AM IST (Updated: 30 Jun 2018 11:02 PM IST)
t-max-icont-min-icon

அதிக பாரத்துடன் செல்லும் லாரிகளால் சாலை விரைவில் சேதமடைவதாக கூறி கருங்கல் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு ஆதரவாக ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.யும் கலந்து கொண்டார்.

கருங்கல்,

கருங்கலில் இருந்து டாரஸ் லாரிகள் மூலம் நால்வழிசாலை பணிக்காக பெரிய– பெரிய பாறாங் கற்கள் எடுத்து செல்லப்படுகிறது. குறிப்பாக கருங்கலில் இருந்து முள்ளங்கினாவிளை, தாழக்கன்விளை, தொலையாவட்டம் வழியாக கொல்லங்கோட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

முள்ளங்கினாவிளை– தொலையாவட்டம் சாலை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. தற்போது, அந்த சாலை சேதமடைந்ததுடன், மழைநீர் வடிகால்களும் உடைந்து சேதம் அடைந்து விட்டன. இந்த சாலை வழியாக அளவுக்கு மீறிய பாரத்துடன் பாறாங்கற்களை ஏற்றி செல்வதால்தான் சாலை விரைவில் சேதமடைந்ததாக அந்த பகுதி மக்கள் புகார் கூறி வருகிறார்கள்.

இந்தநிலையில், நேற்று காலையில் கருங்கல் அருகே முள்ளங்கினாவிளை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கூடினர். அவர்கள், டாரஸ் லாரிகளில் அதிக பாரத்துடன் பாறாங்கற்களை ஏற்றி செல்வதை தடுக்ககோரி  திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு டாரஸ் லாரி சிறைபிடிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த கருங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, லாரிகளில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. அத்துடன் சிறைபிடிக்கப்பட்ட லாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story