தமிழக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்வது கண்டிக்கத்தக்கது - டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி


தமிழக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்வது கண்டிக்கத்தக்கது - டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 1 July 2018 4:45 AM IST (Updated: 1 July 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்வது கண்டிக்கத்தக்கது என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

கோத்தகிரி,

கோத்தகிரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேற கழகத்தின் துணை பொது செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான டி.டி.வி.தினகரன் கோத்தகிரிக்கு நேற்று வந்தார். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரிக்கு வரும் வழியில் குஞ்சப்பனை, கொட்டக்கம்பை, சக்கத்தா மாரியம்மன் கோவில் மற்றும் அரவேனு பகுதியில் டி.டி.வி தினகரனுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து அவர், கோத்தகிரி டானிங்டன் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி, கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசை எதிர்த்து பேசுபவர்கள் மற்றும் விமர்சனம் செய்பவர்களை கைது செய்து அரசு நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது. மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொள்ளை யடித்த பணத்தை தினகரன் மூலம் பெற்றுக் கொண்ட 19 எம்.எல்.ஏக்கள் உல்லாசமாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கின்றனர் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருப்பதற்கு எனது பதில், அவர் கீழ்பாக்கத்தில் சேர்க்கப்பட வேண்டியவர் என்பது தான். நிச்சயம் எங்களுக்கு நீதி கிடைக்கும். அதைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறும் போது நிச்சயம் இந்த ஆட்சி முடிவுக்கு வரும்.

ஜி.எஸ்.டி.யால் தமிழ்நாட்டிற்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது தான் உண்மை. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு கொண்டு வருவதை கடுமையாக எதிர்த்து வந்தார். ஜி.எஸ்.டி.யால் தமிழகத்தில் உள்ள தொழில்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்பது தான் உண்மை. 8 வழிச்சாலை திட்டத்தால் வீடுகள், நிலங்களை இழந்து தவிக்கும் விவசாயிகளை பழனிமலை முருகன் தான் காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் உள்ள முத்தையா அரங்கத்திற்கு வந்த டி.டி.வி தினகரனை கோத்தகிரியைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் சந்தித்து தங்களது குறைகள் குறித்து எடுத்து கூறினர். இதே போல அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை தொழிலாளர்களும் அவரிடம் தொழிற்சாலையில் உற்பத்தி குறைப்பு செய்து வருவதால் தங்களுக்கு தற்போது பணி இழக்கும் அபாயம் உள்ளதைக் குறித்து விளக்கமாக எடுத்து கூறினர்.

Next Story