எந்த தேர்தலையும் சந்திக்க எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை - செந்தில்பாலாஜி பேட்டி


எந்த தேர்தலையும் சந்திக்க எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை -  செந்தில்பாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 1 July 2018 4:30 AM IST (Updated: 1 July 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

எந்த தேர்தலையும் சந்திக்க எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை என்று கோவையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

கோவை,

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கோவை கொடிசியா மைதானத்தில் வருகிற 8–ந் தேதி பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். பொதுக்கூட்டத்துக்கு பந்தல் அமைப்பதற்கான கால்கோள் விழா நேற்று காலை நடந்தது.

இதில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

110–வது விதியின் கீழ் முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த பல்வேறு திட்டங்கள் நிலுவையில் உள்ளன. அதை எல்லாம் நிறைவேற்றாமல் எடப்பாடி பழனிசாமி அரசு 8 வழி சாலை திட்டத்தை கொண்டு வந்து உள்ளது. நில உரிமையாளர்களும், விவசாயிகளும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ள போதிலும் அதை கண்டு கொள்ளாமல் அவர்களின் நிலங்களை அபகரிப்பதையே நோக்கமாக உள்ளனர். 8 வழிச்சாலை அமைப்பது தேவையற்றது. இந்த அரசு எந்த திட்டத்தை அறிவித்தாலும் அவை தனியாருக்கு சாதகமாகவே உள்ளது.

கோவை மாநகராட்சியில் தற்போது சீரான குடிநீர் வினியோகம் உள்ளது. ஆனால் 24 மணி நேர குடிநீர் திட்டம் என்று கூறி குடிநீர் வினியோகத்தை வெளிநாட்டு தனியார் நிறுவனத்துக்கு வழங்குவது ஏன்?. இது தேவையற்றது. டி.டி.வி.தினகரன் தலைமையில் ஆட்சி மலரும் போது இந்த திட்டத்தை ரத்து செய்வார்.

உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் ஏராளமான பணிகள் முடங்கி உள்ளன. உள்ளாட்சி தேர்தலை எதிர்த்து வழக்குகள் எதுவும் இல்லை. அப்படியிருக்கும் போது உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைத்தது ஏன்?. கூட்டுறவு சங்க தேர்தல் கூட நியாயமாக நடைபெற வில்லை. தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கத் தேர்தலை அறிவித்து அதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டதால் அது நிலுவையில் உள்ளது.

எனவே உள்ளாட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல் என எந்த தேர்தலாக இருந்தாலும் அதை சந்திக்க முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை. வரும் சட்டமன்ற தேர்தலிலும் 234 தொகுதிகளுக்கும் டி.டி.வி.தினகரன் அறிவிக்கும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். நாடாளுமன்ற தேர்தலிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story