9 ஊராட்சிகளில் நடந்த சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 2,112 மனுக்கள் பெறப்பட்டன


9 ஊராட்சிகளில் நடந்த சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 2,112 மனுக்கள் பெறப்பட்டன
x
தினத்தந்தி 1 July 2018 3:00 AM IST (Updated: 1 July 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

ஜமுனாமரத்தூர் தாலுகாவில் உள்ள 9 ஊராட்சிகளில் நடந்த சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 2,112 மனுக்கள் பெறப்பட்டன. ஜமுனாமரத்தூரில் நடந்த முகாமில் கலெக்டர் கந்தசாமி கலந்துகொண்டார்.

கலசப்பாக்கம்,
ஜமுனாமரத்தூர் தாலுகாவில் உள்ள 9 ஊராட்சிகளில் நடந்த சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 2,112 மனுக்கள் பெறப்பட்டன. ஜமுனாமரத்தூரில் நடந்த முகாமில் கலெக்டர் கந்தசாமி கலந்துகொண்டார்.

ஜமுனாமரத்தூர் தாலுகாவில் உள்ள கோவிலூர், குட்டகரை, மேல்பட்டு, வீரப்பனூர், பலாமரத்தூர், நம்மியம்பட்டு, புலியூர், மேல்சிலம்படி, கானமலை ஆகிய 9 ஊராட்சிகளில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடத்தப்படும் என்று கடந்த 16-ந் தேதியன்று ஜமுனாமரத்தூரில் நடைபெற்ற ஜவ்வாதுமலை கோடை விழாவில் கலெக்டர் கந்தசாமி அறிவித்தார். அதன்படி, 9 ஊராட்சிகளில் நேற்று சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடந்தது.

ஜமுனாமரத்தூர் தாலுகாவில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் கோவிலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து 390 கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பெற்றார்.

முகாமில் வருவாய்த்துறை மூலமாக 2 விதவைகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெறுவதற்கான அனுமதி ஆணைகளும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலமாக 7 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து கலெக்டர் கந்தசாமி ஜமுனாமரத்தூர் அரசினர் பழங்குடியினர் நல மாணவிகள் விடுதியில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், ஜமுனாமரத்தூர் தாசில்தார் அலுவலகம் கட்டுவதற்கான இடத்தினையும், கூட்ட அரங்கத்துடன் கூடிய அரசு ஆய்வு மாளிகை கட்டுவதற்கான இடத்தினையும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இதேபோல பட்டரைகாடு கிராமத்தில் நடந்த முகாமில் 127 மனுக்களும், மேல்பட்டு கிராமத்தில் நடைபெற்ற முகாமில் 161 மனுக்களும், வீரப்பனூர் கிராமத்தில் நடந்த முகாமில் 215 மனுக்களும், பலாமரத்தூர் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் 241 மனுக்களும், நம்மியம்பட்டு கிராமத்தில் நடந்த முகாமில் 50 மனுக்களும், புலியூர் கிராமத்தில் நடந்த முகாமில் 332 மனுக்களும், மேல்சிலம்படி கிராமத்தில் நடந்த முகாமில் 264 மனுக்களும், அமிர்தியில் நடந்த முகாமில் 332 மனுக்களும் பெறப்பட்டன.

இந்த முகாம்களில் வன உரிமை சட்டத்தின் கீழ் நிலப்பட்டா கேட்டு 405 மனுக்களும், சாதி சான்றிதழ் கேட்டு 672 மனுக்களும், முதியோர் மற்றும் இதர உதவித்தொகை கேட்டு 210 மனுக்களும், இதர துறைகளின் 825 மனுக்களும் என மொத்தம் 2,112 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Next Story