வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.1½ லட்சம் மோசடி


வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.1½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 30 Jun 2018 7:12 PM GMT (Updated: 30 Jun 2018 7:12 PM GMT)

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.1½ லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாலிபர், போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தார்.

வேலூர்,
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.1½ லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாலிபர், போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தார்.

ஆம்பூர் தாலுகா விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கோகுல்நாத் (வயது 23). இவர், நேற்று போலீஸ் சூப்பிரண்டு பகலவனிடம் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

நான் சிவில் என்ஜீனியரிங் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்த பள்ளிக்கொண்டாவை சேர்ந்த நண்பரை கடந்த ஆண்டு சந்தித்தேன். அவர் வெளிநாட்டில் வேலை பார்த்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

மேலும் சில மாதங்களில் வெளிநாடு செல்ல இருப்பதாகவும், அங்கு சென்றவுடன் அவர் பணிபுரியும் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.1½ லட்சம் செலவாகும் என்றும் கூறினார்.

இதையடுத்து நான் கடந்த பிப்ரவரி மாதம் அவரிடம் ரூ.1½ லட்சம் கொடுத்தேன். தொடர்ந்து சில நாட்களில் அவர் வேலைக்காக வெளிநாடு சென்றுவிட்டார். வெளிநாடு சென்று 5 மாதங்கள் ஆகியும், இதுவரை வேலை வாங்கி தரவில்லை.

இதுகுறித்து அவரை தொடர்பு கொண்டு கேட்டால், வேலை வாங்கி தருவதாக காலம் கடத்தி வருகிறார். கடந்த சில வாரங்களாக எனது செல்போன் அழைப்பை எடுக்காமலும், நான் கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் மோசடி செய்து வருகிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நான் கொடுத்த பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Next Story