பாதியில் விட்ட பள்ளிப்படிப்பை தொடரும் மாணவன் பிணம் எரிக்கும் தொழில் செய்யும் தாய் நெகிழ்ச்சி


பாதியில் விட்ட பள்ளிப்படிப்பை தொடரும் மாணவன் பிணம் எரிக்கும் தொழில் செய்யும் தாய் நெகிழ்ச்சி
x
தினத்தந்தி 1 July 2018 3:45 AM IST (Updated: 1 July 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய மாணவன் ‘தினத்தந்தி’யில் வெளியான கட்டுரையின் தாக்கத்தால் மீண்டும் படிப்பை தொடர்கிறான். இதனால் பிணம் எரிக்கும் அவனுடைய தாயார் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

தேனி,

பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய மாணவன் ‘தினத்தந்தி’யில் வெளியான கட்டுரையின் தாக்கத்தால் மீண்டும் படிப்பை தொடர்கிறான். இதனால் பிணம் எரிக்கும் அவனுடைய தாயார் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

தேனி மாவட்டம், போடி மயானத்தில் எரிவாயு தகன மேடை அமைந்துள்ளது. இங்கு பிணம் எரிக்கும் பணியில் முருகேஸ்வரி என்பவர் ஈடுபட்டுள்ளார். அவருடைய கணவர் கருப்பையாவும் அங்கு தான் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு பால்பாண்டி (வயது 15), வீரபத்திரன் (13) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

பால்பாண்டி 8-ம் வகுப்பு படித்துள்ளான். மேற்கொண்டு படிக்காமல் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி விட்டான். குடும்ப வறுமையின் காரணமாக அவனும் வேலைக்கு சென்று வந்தான். 2-வது மகன் வீரபத்திரன் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்தநிலையில் பிணம் எரிக்கும் பணியை சேவை மனப்பான்மையோடு செய்து வரும் முருகேஸ்வரி குறித்து ‘தினத்தந்தி’ குடும்ப மலரில் சிறப்புக் கட்டுரை வெளியிடப்பட்டு இருந்தது.

இதை பார்த்து விட்டு பலரும் முருகேஸ்வரிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த கட்டுரையை வாசித்த பிறகு பால்பாண்டி மீண்டும் தான் படிக்க விரும்புவதாக தனது தாயாரிடம் தெரிவித்துள்ளான். இதற்கிடையே கட்டுரையை பார்த்து விட்டு அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சசிகலா, முருகேஸ்வரியை தொடர்பு கொண்டு விசாரித்தார். அப்போது அவர் தனது மூத்த மகன் படிப்பை பாதியில் நிறுத்தியதையும், தற்போது அவன் படிக்க விரும்புவதையும் தெரிவித்தார்.

இதையடுத்து அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலர்கள் நேரில் சென்று பால்பாண்டியை போடி 10-வது வார்டு நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பில் சேர்த்து விட்டனர். தொடர்ந்து பால்பாண்டி மகிழ்வுடன் பள்ளிக்கு சென்று வருகிறான்.

இதுகுறித்து முருகேஸ்வரி கூறுகையில், ‘என் மகன் வயது பிள்ளைகள் எல்லாம் 10-ம் வகுப்பு முடித்து விட்டார்கள். எங்கள் குடும்ப வறுமையால் அவன் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டான். மீண்டும் பள்ளிக்கு போகச் சொன்னால் போகமாட்டேன் என்று அடம் பிடித்தான். அழுதும், புலம்பியும் பார்த்து விட்டேன். அவன் கேட்கவில்லை. ‘தினத்தந்தி’யில் வெளியான கட்டுரையை என் மகன் படித்துப் பார்த்தான். படித்து விட்டு தயங்கி, தயங்கி என்னிடம் வந்து நான் மீண்டும் படிக்கப் போகிறேன் என்றான். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் கெஞ்சியும் கேட்காதவன், இப்போது தானாய் படிக்க முன்வந்துள்ளதை நினைத்து நெகிழ்ச்சியாக உள்ளது. காலையில் எழுந்து சீக்கிரம் பள்ளிக்கு புறப்பட்டு செல்கிறான். முன்பை விட என் மகன்கள் இருவரும் என் மீது அதிக பாசம் காட்டுகிறார்கள். எனக்கு ஆதார் அட்டை இல்லாததால் ரேஷன் கார்டு செல்லாமல் போய்விட்டது. இதனால், ரேஷன் பொருட்களை வாங்க முடியவில்லை. ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்து 1½ ஆண்டு ஆகியும் இன்னும் அட்டை வரவில்லை. ஆதார் அட்டை வரும் வரை ரேஷன் பொருட்கள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும்’ என்றார்.

Next Story