திண்டுக்கல்அய்யலூரில் குழந்தை கடத்தல் பீதி: ஆந்திர மாநில தொழிலாளிக்கு அடி-உதை


திண்டுக்கல்அய்யலூரில் குழந்தை கடத்தல் பீதி: ஆந்திர மாநில தொழிலாளிக்கு அடி-உதை
x
தினத்தந்தி 30 Jun 2018 10:30 PM GMT (Updated: 30 Jun 2018 7:48 PM GMT)

அய்யலூரில் குழந்தை கடத்தல் பீதியில், ஆந்திர மாநில தொழிலாளிக்கு அடி-உதை விழுந்தது.

வடமதுரை,

அய்யலூரில் குழந்தை கடத்தல் பீதியில், ஆந்திர மாநில தொழிலாளிக்கு அடி-உதை விழுந்தது.

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் மற்றும் கொம்பேறிபட்டி பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், கடந்த 2 நாட்களாக சுற்றி திரிந்துள்ளார். நேற்று காலை அய்யலூர் சந்தைப்பேட்டை அருகே சுற்றித்திரிந்த அந்த நபரை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவரை பிடித்து விசாரித்தனர். அவர் தெலுங்கு மொழியில் பேசியுள்ளார்.

இதனால் அவர் குழந்தை கடத்த வந்த வெளிமாநில நபர் என்று சந்தேகமடைந்த பொதுமக்கள் அவரை அடித்து உதைத்தனர். பின்னர் அவரை கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினர். இதுகுறித்து தகவலறிந்ததும் வடமதுரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களிடம் இருந்து அந்த நபரை மீட்டனர்.

போலீசாரின் விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம், ராஜமுந்திரி மாவட்டம் மாங்கூர் பகுதியை சேர்ந்த பெத்துராஜ் (வயது 40) என்பது தெரியவந்தது. தொழிலாளியான இவர், ஆழ்துளை கிணறு அமைக்கும் வேலைக்காக தமிழகத்துக்கு வந்தபோது, வழி தவறியதால் கையில் காசு இல்லாமல் ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்துள்ளார்.

இதையடுத்து அவர் வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் ரெயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் கடந்த ஜூன் மாதம் 13-ந் தேதி ஆந்திர மாநில மூதாட்டி ஒருவர் சுற்றுலா வந்த இடத்தில் வழிதவறி செங்குறிச்சி பகுதியில் சுற்றித்திரிந்தார். அவரை குழந்தை கடத்த வந்தவர் என்று கருதி பொதுமக்கள் தாக்கியது குறிப்பிடத்தக்கது.

அய்யலூரில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை காண பள்ளியில் குவிந்தனர். அதன்பின்பு பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டதாக வந்த செய்தி வதந்தி என்று தெரியவந்தது. தொடர் வதந்தி காரணமாக அப்பாவி மக்களும் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் குழந்தைகளை கடத்துவதாக வதந்தி பரப்பப்படுகிறது. இதனால் குழந்தை கடத்தல் பீதியில் ஒரு சில வட மாநிலத்தவர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களும் நடந்தன.

சமூக வலைதளங்களில் வரும் செய்தியின் உண்மை தன்மையை அறியாமல் ஒரு சிலர் பரப்பி வருவதால் அப்பாவி பொதுமக்கள் தாக்கப்படும் சூழல் உள்ளது. எனவே சமூகவலைதள பயன்பாட்டாளர்கள் சமூக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். பொய்யான வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Next Story