உப்பூர் அனல் மின்நிலையத்துக்கு எதிர்ப்பு கிராம மக்கள் முற்றுகை; பெண்கள் தீக்குளிக்க முயற்சி


உப்பூர் அனல் மின்நிலையத்துக்கு எதிர்ப்பு கிராம மக்கள் முற்றுகை; பெண்கள் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 1 July 2018 4:30 AM IST (Updated: 1 July 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

உப்பூர் அனல் மின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் உப்பூர் அருகே 800 மெகாவாட் திறன் கொண்ட 2 அனல் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மின் நிலையத்திற்கு விவசாய நிலங்களை ஆர்ஜிதம் செய்வது தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம், திருவாடானை, தேவிபட்டினம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

அப்போது அனல் மின் நிலையத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும் தூசிகள் விளைநிலங்களில் படிவதால் மண்ணின் தன்மை மாறிவிடும். இதுதவிர இதில் இருந்து வெளியேறும் கழிவுநீரை கடலில் கலப்பதால் மீன்வளம் பாதிக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் எனக்கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் அரசு சார்பில் அனல் மின் நிலையம் அமைப்பதற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை கண்டித்து விவசாயிகள், மீனவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினரும் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

ஆனாலும் தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் கீழ் பாசன வசதி பெறும் 52 கண்மாய்களின் வடிநீர் நாகனேந்தல், வளமாவூர் கிராமங்களுக்கு இடையே செல்லும் ஆற்றுப்பகுதி வழியாக கடலில் கலப்பதை மறித்து அனல் மின் நிலையத்துக்கு கட்டிடம் கட்டுவதாக கூறி நாகனேந்தல் நீர்பாசன விவசாயிகள் சார்பில் கடந்த ஆண்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனை விசாரித்த நீதிபதி நீர் வழிப்பாதையில் அனல் மின் நிலையத்துக்கு கட்டிடம் எதுவும் கட்டக்கூடாது என்றும், அவ்வாறு மீறி கட்டினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே அதனை இடித்து தர வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும் அங்கு கட்டிடம் கட்டுவதற்கும் தடை விதித்தனர்.

அதன் பின்னர் கடந்த சில மாதங்களாக பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையில் தற்போது மீண்டும் நீர்வழிப்பாதையில் கட்டிட பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, திருவாடானை தாசில்தார் ஆகியோருக்கு மனு அளித்தனர். ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லையாம்.

இதையடுத்து நீர்வழி பாதையில் கட்டிடம் கட்டுவதை கண்டித்து நேற்று நாகனேந்தல், வளமாவூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் கிராம தலைவர்கள் நாகனேந்தல் காளிமுத்து தேவர், வளமாவூர் கதிரேசன் ஆகியோர் தலைமையில் 200–க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 10–க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதைக்கண்ட போலீசார் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் திருவாடானை தாசில்தார் சாந்தி, போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர்கள் புவனேசுவரி, ராணிமுத்து ஆகியோர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாளை (திங்கட்கிழமை) திருவாடானை தாலுகா அலுவலகத்தில் இதுதொடர்பாக சமாதான கூட்டம் நடத்துவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story