கைத்தறி நெசவாளர் ஆதரவு திட்டம் குறித்து காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட 4 மாவட்ட நெசவாளர்களிடம் கருத்து கேட்பு


கைத்தறி நெசவாளர் ஆதரவு திட்டம் குறித்து காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட 4 மாவட்ட நெசவாளர்களிடம் கருத்து கேட்பு
x
தினத்தந்தி 1 July 2018 4:00 AM IST (Updated: 1 July 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

கைத்தறி நெசவாளர் ஆதரவு திட்டம் குறித்து காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட நெசவாளர்களிடம் கைத்தறி மற்றும் துணி நூல் துறை முதன்மை செயலாளர் பனீந்தர்ரெட்டி கருத்து கேட்டார்

காஞ்சீபுரம்,

கைத்தறி நெசவாளர் ஆதரவு திட்டம் குறித்து காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட நெசவாளர்களிடம் கைத்தறி மற்றும் துணி நூல் துறை முதன்மை செயலாளர் பனீந்தர்ரெட்டி கருத்து கேட்டார்.

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கைத்தறி நெசவாளர் ஆதரவு திட்டம் குறித்து நெசவாளர்களின் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில் காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களை சேர்ந்த 250 நெசவாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை இயக்குனர் முனியநாதன் தலைமை தாங்கினார்.

தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை முதன்மை செயலாளர் பணிந்தரரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நெசவாளர்களின் கருத்துகளை கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில், கைத்தறி துறை கூடுதல் இயக்குனர் கர்ணன், காஞ்சீபுரம் மாவட்ட கைத்தறி துறை உயர் அதிகாரி செல்வம், பட்டு கூட்டுறவு சங்க நிர்வாக இயக்குனர்கள் பிரகாஷ், சாரதி, சுப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கைத்தறி மற்றும் துணி நூல் துறை முதன்மை செயலாளர் பனீந்தர்ரெட்டி நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

நெசவாளர்களின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. காஞ்சீபுரம் அருகே அமைய உள்ள பட்டு பூங்கா விவகாரத்தில் தமிழக அரசு செய்யவேண்டிய பணிகள் முடிக்கப்பட்டு விட்டது. இப்போது டெண்டர் விடப்பட்டுள்ளது. அந்த பணி முடிந்ததும் பட்டு பூங்கா விரைவில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். காஞ்சீபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தில் நடந்த முறைகேடுகள் பற்றி அதிகாரிகள் மீது வந்த புகாரையடுத்து துறை ரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பட்டு சேலை மீதான ஜி.எஸ்.டி. வரி விவகாரம் குறித்து மத்திய அரசிடம் பேசப்பட்டு வருகிறது. குறைந்த விலையில் பட்டு சேலைகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு இருக்கும். நெசவாளர்களின் தினக்கூலி உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story