விக்கிரவாண்டி அருகே லாரி மீது பஸ் மோதல்; டிரைவர் உடல் நசுங்கி பலி 10 பேர் படுகாயம்


விக்கிரவாண்டி அருகே லாரி மீது பஸ் மோதல்; டிரைவர் உடல் நசுங்கி பலி 10 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 30 Jun 2018 9:30 PM GMT (Updated: 30 Jun 2018 8:07 PM GMT)

விக்கிரவாண்டி அருகே லாரி மீது பஸ் மோதிய விபத்தில் டிரைவர் உடல் நசுங்கி பலியானார். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

விக்கிரவாண்டி,

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 40–க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு விரைவு பஸ் ஒன்று நெல்லைக்கு புறப்பட்டது. பஸ்சை நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வடகரையை சேர்ந்த பாலமுருகன் (வயது 35) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக கோவில்பட்டியை சேர்ந்த கண்ணன் என்பவர் இருந்தார்.

அந்த பஸ் நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை பகுதியில் உள்ள சென்னை– திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற லாரியை பஸ் டிரைவர் முந்திச்செல்ல முயன்றார். இதில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர்பாராதவிதமாக லாரியின் பின்பக்கம் மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

இந்த விபத்தில் பஸ் டிரைவர் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பயணிகள் சென்னை அய்யப்பன் நகரை சேர்ந்த வாசுகி(25), குரோம்பேட்டை சசிகுமார், மாம்பாக்கம் அண்ணாமலை(30), கொளப்பாக்கம் பிரவின்குமார்(42) உள்ளிட்ட 10 பேர் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த வாசுகி உள்ளிட்ட 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான பாலமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்துக்குள்ளான அரசு பஸ் மற்றும் லாரியை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சென்னை– திருச்சி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story