கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அமைச்சரை சந்திக்க நாமம் போட்ட அட்டைகளுடன் வந்தவர்களால் பரபரப்பு


கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அமைச்சரை சந்திக்க நாமம் போட்ட அட்டைகளுடன் வந்தவர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 July 2018 4:00 AM IST (Updated: 1 July 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைளை நிறைவேற்ற கோரி அமைச்சர் எம்.சி.சம்பத்தை சந்திக்க நாமம் போட்ட அட்டைகளுடன் வந்தவர்களை அ.தி.மு.க.வினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்,

தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சொந்த தொகுதியான கடலூர் தொகுதியில் பொதுமக்களுக்கு பயனளிக்கக்கூடிய திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்று பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பாக கடலூரில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த ஜவான்பவன்– கம்மியம்பேட்டை சாலை குண்டும், குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக உள்ளது. இது தவிர புதிய பஸ் நிலையம், அரசு மருத்துவக் கல்லூரி, நேதாஜி சாலை விரிவாக்க பணிகள், கம்மியம்பேட்டை ரெயில்வே மேம்பாலம் போன்ற திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன.

இத்திட்டங்களை நிறைவேற்றாமல் பொதுமக்களை ஏமாற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து சப்–கலெக்டர் அலுவலகத்தில் அல்வா கொடுக்கும் போராட்டத்தை பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினர் நடத்தினார்கள். அதன்பிறகு அவர்கள் காதில் பூ சுற்றிக்கொண்டு நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினார்கள். ஆனாலும் இத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாததால் பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினர் நாமம் போட்ட அட்டையை தங்களது சட்டை பட்டனுடன் கோர்த்து தொங்கப்போட்டுக்கொண்டு கடலூர் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அமைச்சர் எம்.சி.சம்பத்தை சந்திப்பதற்காக நேற்று காலையில் சென்றனர்.

அப்போது அங்கிருந்த அ.தி.மு.க.வினர் அமைச்சரை சந்திக்க நாமம் போட்டுக்கொண்டு வந்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாமம் போட்ட அட்டையை கழற்றிக்கொண்டு வந்தால் அமைச்சரை சந்திக்க அனுமதிப்போம் என்று அ.தி.மு.க.வினர் கூறினார்கள். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நாமம் போட்ட அட்டைகளை களைந்துவிட்டு அவர்கள் அமைச்சர் எம்.சி.சம்பத்தை சந்தித்து மனு கொடுத்தனர். அமைச்சரை சந்தித்து விட்டு வெளியே வந்த பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினர் கூறுகையில், அமைச்சரை சந்திக்க சென்ற எங்களை மிரட்டும் தொனியில் அ.தி.மு.க.வினர் பேசியதாக குற்றம் சாட்டினார்கள். இந்த போராட்டத்தில் பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் வெண்புறாகுமார், சிவாஜி கணேசன், சுப்புராயன், குருராமலிங்கம், சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தால் விருந்தினர் மாளிகையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story