புதுவையில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் - கவர்னர் கிரண்பெடி தகவல்


புதுவையில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் - கவர்னர் கிரண்பெடி தகவல்
x
தினத்தந்தி 30 Jun 2018 10:45 PM GMT (Updated: 30 Jun 2018 8:27 PM GMT)

புதுவையில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.

திருக்கனூர்,

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் நீராதாரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். மேலும் தனக்கு வரும் புகார்களின் அடிப்படையில் தனியார் தொழிற்சாலைகள், மற்றும் கல்லூரிகளுக்கும் சென்று கவர்னர் கிரண்பெடி பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். நேற்று காலை திருக்கனூர் அருகே உள்ள சோம்பட்டு கிராமத்துக்கு வந்த அவர் அங்கு பூக்கள் சாகுபடி செய்யும் விவசாய நிலங்களை பார்வையிட்டார்.

பின்னர் சோம்பட்டு காலனியில் உள்ள குளத்தை பார்வையிட்ட அவர் அதனை சீரமைக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து அங்குள்ள முத்துமாரியம்மன் கோவில் திடலில் விவசாயிகள் மற்றும் பெண்களுடன் கவர்னர் கிரண்பெடி கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது;–

வீடுகளையும், கிராமத்தையும் பெண்கள் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் சுய தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கடன் உதவிபெற்றுத்தரப்படும். அதன் மூலம் பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

குளம் சீரமைப்பு பணிகளில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ஈடுபட வேண்டும். பஞ்சாயத்து அமைப்பு இருந்தால் இந்த பணிகளை அவை மேற்கொள்ளும். தற்போது பஞ்சாயத்துஅமைப்பு இல்லாததால் கிராம மக்களே இதனை செய்ய வேண்டும்.

குடும்பத்தை முன்னேற்ற நிலைக்கு கொண்டு செல்ல ஆண்கள் உழைக்க வேண்டும். சம்பாதிக்கும் பணத்தை மதுகுடித்து செலவழித்தால் உடல் கெடுவதோடு குடும்பமும் வறுமையில் வாடும். ஆண்கள் குடிப்பழக்கத்துக்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இளைஞர்கள் குடிப்பழக்கத்தை கைவிட வேண்டும்.

புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை ஏற்று புதுவையில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். அதுவரை நம்முடைய கிராம பணிகளை நாமே செய்ய வேண்டும்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி பேசினார்.

முன்னதாக சோம்பட்டுக்கு வந்த கவர்னர் கிரண்பெடியை டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. வரவேற்றார்.கவர்னருடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர், மற்றும் காவல் துறை அதிகாரிகள் உடன் வந்தனர்.


Next Story