அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை


அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை
x
தினத்தந்தி 1 July 2018 4:00 AM IST (Updated: 1 July 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை பற்றி விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்து உள்ளார்.

சென்னை,

காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை பற்றி விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்து உள்ளார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி நதி நீர் பிரச்சினையில் இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையமும் அமைக்கப்பட்டுவிட்ட நிலையில், கர்நாடக மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான அரசு, ஏற்கனவே சித்தராமையா தலைமையில் இருந்த அரசு கடைபிடித்து வந்த வழக்கத்தின் தொடர்ச்சியாக, அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை கூட்டி மீண்டும் காவிரி பிரச்சினையை சிக்கலாக்கிடவும், பிரச்சினையின் ஆயுளை நீட்டிக்கவும் வஞ்சக எண்ணத்தோடு திட்டமிட்டிருப்பதற்கு, தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள கர்நாடக முதல்-மந்திரி மத்திய நீர்வளத்துறை மந்திரியையும், பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து விட்டு திரும்பியவுடன், இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, இப்படியொரு பின்னடைவான அணுகுமுறையை மேற்கொண்டிருப்பதில், தமிழகத்திற்கு தொடர்ந்து அநீதி இழைக்க ஒரு கூட்டு சதித்திட்டம் உருவாகியிருக்கிறதோ என்றே கருதிட வேண்டியிருக்கிறது.


காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் வருகின்ற 2-ந் தேதி (நாளை) நடைபெறவுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் மீண்டும் முறையிடுவோம் என்றும் ‘ஸ்கீம்’ பற்றி விளக்கம் கேட்போம் என்றும், இந்த ஸ்கீமை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் மீண்டும் பழைய பல்லவியையே பாடி குறுக்குச்சால் ஓட்டுவதும், காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளையும், காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவுகளையும் வேண்டுமென்றே பிடிவாதமாக அலட்சியப்படுத்துவதுமான கர்நாடக மாநில முதல்-மந்திரி குமாரசாமியின் பிழையான வழிமுறையை, நடுநிலையாளர் யாரும் அவர்கள் கர்நாடகத்தைச் சார்ந்தோராயினும், தமிழகத்தைச் சார்ந்தோராயினும் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அண்டை மாநில உறவுகளுக்கு பேராபத்தை உருவாக்கும் இந்த போக்கு, தமிழக விவசாயிகளின் உரிமைகளைப் பறித்து அவர்களின் வாழ்வாதாரத்தை முறித்துப்போட்டுவிட, மத்திய பா.ஜ.க. மற்றும் கர்நாடக மாநில அரசின் திட்டமிட்ட முயற்சியோ என்று அனைவரையும் சந்தேகம் கொள்ள வைக்கிறது.

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிலும், மத்திய அரசிதழில் வெளியிட்ட இறுதி வரைவுத் திட்ட அறிவிக்கையிலும், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதிலும் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் உறுதித்தன்மை உருக்குலைய முயற்சி செய்யப்பட்டுள்ளது. எனினும், அமைக்கப்பட்டுள்ள காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தையும் செயலிழக்க வைக்கும் கர்நாடக மாநில அரசின் திட்டத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு எவ்விதத்திலும் துணைபோய்விடக்கூடாது என்று தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

கர்நாடக மாநில அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியிருக்கின்ற சூழ்நிலையில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, கர்நாடக மாநில அரசின் இந்த புதிய நிலைப்பாட்டால் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை பற்றி அவசர அவசியமாக விவாதிக்க வேண்டும் எனவும், காவிரி பிரச்சினையில் இப்போது கிடைத்துள்ள இந்த குறைந்தபட்ச உரிமையையாவது நிலைநாட்ட அனைத்துக் கட்சிகளின் துணையுடன் போராடுவதுடன், கர்நாடக மாநிலத்தை விட தமிழகத்தில் அதிக எம்.பி.க்கள் இருப்பதை மத்திய பா.ஜ.க. அரசுக்கு சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்திட வேண்டும்.

அது மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.பி.க்களுடன் உடனடியாக பிரதமரை சந்தித்து, காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அச்சுப்பிசகாமல் அணுவளவும் வழுவின்றி அப்படியே நிறைவேற்றுவதற்கு உரிய தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.


Next Story