வியாபாரிகள் எதிர்ப்பையும் மீறி காய்கறி வணிக வளாகம் செயல்பாட்டுக்கு வந்தது அமைச்சர்கள் நேரில் ஆய்வு


வியாபாரிகள் எதிர்ப்பையும் மீறி காய்கறி வணிக வளாகம் செயல்பாட்டுக்கு வந்தது அமைச்சர்கள் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 30 Jun 2018 11:15 PM GMT (Updated: 30 Jun 2018 9:21 PM GMT)

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் எதிர்ப்பையும் மீறி, கள்ளிக்குடியில் காய்கறி வணிக வளாகம் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. 2 அமைச்சர்கள் பங்கேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

திருச்சி,

திருச்சி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட்டில், 5 ஏக்கர் பரப்பளவில் காய்கறிகள், பழங்கள், மலர்கள் மற்றும் இதர பொருட்களுக்கான மொத்த மற்றும் சில்லரை வர்த்தகம் நடந்து வருகிறது. தினமும் 300-க்கும் மேற்பட்ட கனகரக வாகனங்கள் காந்தி மார்க்கெட் பகுதிக்கு வந்து செல்வதால் போக்குவரத்துக்கு மிகுந்த இடையூறு ஏற்பட்டது. மேலும் காந்தி மார்க்கெட்டில் உருவாகும் அதிக அளவிலான குப்பைகளை கையாள்வதிலும் மிகப்பெரிய சிக்கல்கள் ஏற்படுவதால், திருச்சி-மதுரை பைபாஸ் சாலையில் உள்ள கள்ளிக்குடி கிராமத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் ரூ.77 கோடி செலவில் புதிய காய்கறி வணிக வளாகம் கட்டப்பட்டது.

இங்கு 830 கடைகள், குளிர்பதன கிடங்கு, தரம்பிரிப்பு கூடங்களுடன் உணவகம், வங்கி, 86 கழிவறைகள், 10 குளியல் அறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால், கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது.

அதேவேளையில் காந்தி மார்க்கெட்டை விட்டு வெளியேற மாட்டோம் என வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால், கள்ளிக்குடிக்கு காந்தி மார்க்கெட்டை மாற்றுவதில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக இருந்தது. ஏற்கனவே, காந்தி மார்க்கெட்டுக்கு நேற்று முதல் கனரக வாகனங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதலே கனரக வாகனங்களை காந்தி மார்க்கெட்டுக்கு உள்ளே விட போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இதனால் வியாபாரிகளுக்கும், போலீசாருக்கும் இடையே நேற்று முன்தினம் நள்ளிரவில் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதற்கிடையே வியாபாரிகள் எதிர்ப்பையும் மீறி கள்ளிக்குடியில் புதிய காய்கறி, பழங்கள், மலர்கள் மற்றும் இதர பொருட்களுக்கான வணிக வளாகம் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. 300 கடைகள் முழுமையாக ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டாலும், நேற்று சொற்ப எண்ணிக்கையிலேயே அதாவது 5 வியாபாரிகளே கடைகளை திறந்திருந்தனர்.

அதைத்தொடர்ந்து வணிக வளாகத்தில் வேளாண் விற்பனை மற்றும் வணிகவரித்துறை சார்பில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மைத்துறை அமைச்சர் வளர்மதி, எம்.பி.க்கள் குமார், ரத்தினவேல் ஆகியோர் வந்தனர். அவர்கள் வணிக வளாகத்தை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு 5 கடைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். அதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கி பேசினார். வேளாண்மைத்துறை துணை இயக்குனர் கைலாசபதி வரவேற்று பேசினார்.

கலெக்டர் ராஜாமணி பேசுகையில், “காந்தி மார்க்கெட்டில் உள்ள மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் ஆகியோரிடையே உள்ள அச்சம், நடைமுறை பிரச்சினைகள் என அனைத்தும் பேசப்பட்டு, அவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்ட பின்னரே கள்ளிக்குடிக்கு மாற்றம் செய்யப்பட்டு அது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கு வியாபாரிகளின் வசதிக்கேற்ப 2 கடைகளை ஒரே கடையாக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு தேங்கும் காய்கறி கழிவுகள் உள்ளிட்டவைகளை பராமரிக்க அருகிலேயே 3 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே, புதிய வணிக வளாகத்தில் எத்தகையை கோரிக்கை வைத்தாலும் அனைத்தையும் அரசு பூர்த்தி செய்யும். வருங்காலத்தில் மிகப்பெரிய வியாபார ஸ்தலமாக கள்ளிக்குடி உருவெடுக்கும். திருச்சி மாநகரில் மட்டும் 11 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். மக்கள் சுகாதார சீர்கேடு இன்றி வாழ்வதற்கும், போக்குவரத்து இடையூறை தவிர்ப்பதற்கும் தான் காந்தி மார்க்கெட் வியாபார கடைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

அமைச்சர் வளர்மதி பேசுகையில், “எனது ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் வட்டாரத்தில் கள்ளிக்குடி கிராமத்தில் ரூ.77 கோடியில் மொத்த வியாபார வணிக வளாகம் அமைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது 110 விதியின்கீழ் இங்கு வணிக வளாகம் கட்டப்படும் என அறிவித்தார். அதை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி இருக்கிறார். இங்கு வியாபாரிகள், நுகர்வோர் பயன்பெறும் வகையில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மட்டுமின்றி இதர மாவட்ட விவசாயிகளும் இடைத்தரகர் இன்றி நேரடியாக இங்கு வந்து வியாபாரம் செய்யலாம். இதனால், மணிகண்டம் வட்டாரம் மிகப்பெரிய வளர்ச்சி அடையும். வாழை, வெங்காய சந்தையும் இந்த வணிக வளாகத்தில் செயல்படும்” என்றார்.

விழாவில் முறிசி தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, மணிகண்டம் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் முத்துகருப்பன், முன்னாள் துணைத் தலைவர் முத்துலட்சுமி சந்திரசேகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தமிழழகன், நவலூர் குட்டப்பட்டு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அமுதா செல்வம் மற்றும் வேளாண் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story