தத்தா பட்சல்கிகர் மாநில டி.ஜி.பி. ஆக நியமனம் மும்பை புதிய போலீஸ் கமிஷனர் ஜெய்ஸ்வால் மராட்டிய அரசு உத்தரவு


தத்தா பட்சல்கிகர் மாநில டி.ஜி.பி. ஆக நியமனம் மும்பை புதிய போலீஸ் கமிஷனர் ஜெய்ஸ்வால் மராட்டிய அரசு உத்தரவு
x
தினத்தந்தி 30 Jun 2018 10:36 PM GMT (Updated: 30 Jun 2018 10:36 PM GMT)

மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த தத்தா பட்சல்கிகர் மாநில டி.ஜி.பி. ஆனார். மும்பை புதிய கமிஷனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டார்.

மும்பை,

மராட்டிய மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக பதவி வகித்து வந்த சதீஸ் மாத்தூர் நேற்று ஓய்வு பெற்றார்.

இதையடுத்து மராட்டியத்தின் புதிய டி.ஜி.பி.யாக மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த தத்தா பட்சல்கிகர் நேற்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தத்தா பட்சல்கிகர் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டதை அடுத்து யார் மும்பை நகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தானே போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங், சி.ஐ.டி. கமிஷனர் சஞ்சய் பார்வே, புனே கமிஷனர் ராஷ்மி சுக்லா ஆகியோர் நியமிக்கப்படலாம் என கூறப்பட்டது.

இந்தநிலையில் 41-வது மும்பை போலீஸ் கமிஷனராக ஐ.பி.எஸ். அதிகாரி சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டார். 55 வயதான சுபோத் குமார் ஜெய்ஸ்வால் 1985-ம் ஆண்டு அணியை சேர்ந்த ஜ.பி.எஸ். அதிகாரி ஆவார்.

இவர் ஏற்கனவே மாநில ரிசர்வ் போலீஸ் கமிஷனராகவும், உளவு பிரிவான ‘ரா’ அமைப்பின் மூத்த அதிகாரியாகவும், மராட்டிய பயங்கரவாத தடுப்பு படை டி.ஐ.ஜி.யாகவும் பணியாற்றி உள்ளார்.

இது தவிர உயர்மட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பலகோடி ரூபாய் போலி முத்திரைத்தாள் மோசடி வழக்கை வெளிக்கொண்டு வந்த பாராட்டுக்குரியவர் சுபோத் ஜெய்ஸ்வால். மேலும் பயங்கரவாத தடுப்பு படை டி.ஐ.ஜி.யாக இருந்தபோது கடந்த 2006-ம் ஆண்டு மாலேகாவ் குண்டு வெடிப்பு சம்பவம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு வழக்குகளில் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்.

இதற்கிடையே புதிய டி.ஜி.பி. தத்தா பட்சல்கிகர் வருகிற ஆகஸ்ட் 31-ந் தேதி ஓய்வு பெறும் வயதை எட்டுகிறார். ஆனால் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றவர் ஓய்வு பெறும் வயதை கடந்தாலும் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வரையில் அவர் தனது பணியை தொடரலாம் என சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணையில் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவர் சில காலத்துக்கு பணியில் தொடர்வார் என கூறப்படுகிறது.

மாநில புதிய டி.ஜி.பி. தத்தா பட்சல்கிகரும், மும்பை புதிய போலீஸ் கமிஷனர் சுபோத் குமார் ஜெய்ஸ்வாலும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

மும்பை போலீஸ் கமிஷனராக பதவியேற்ற பிறகு நிருபர்களை சந்தித்த சுபோத் குமார் ஜெய்ஸ்வால், அனைத்து விதமான பயங்கரவாத அச்சுறுத்தல்களையும் தனது முன்னோர்கள் வழியை பின்பற்றி எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும் மும்பை நகரம் எதிர்கொள்ளும் எந்தவொரு பயங்கரவாத அச்சுறுத்தல்களையும் தனது தலைமையிலான குழுவினர் தக்க பதிலளிப்பார்கள் என பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.

நகரின் அனைத்து விதமான நடவடிக்கைகள் குறித்தும் தான் அறிந்து வைத்திருப்பதோடு, சிறப்பான அதிகாரிகளை தனது குழுவில் வைத்து இருப்பதாக கமிஷனர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

மும்பை போன்ற பெருநகருக்கு போலீஸ் கமிஷனராக பதவி வகிப்பது பெருமைக்குரியதெனவும் அவர் கூறி னார். 

Next Story