தென்மேற்கு பருவ மழை காரணமாக 4 ஆண்டுகளுக்கு பிறகு சோலையார் அணை நிரம்பியது
தென்மேற்கு பருவமழை காரணமாக 4 ஆண்டுகளுக்கு பிறகு சோலையார் அணை நீர்மட்டம் 160 அடியை தாண்டி நிரம்பி வழிகிறது.
வால்பாறை,
வால்பாறை வட்டார பகுதியில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக்கு முன்பு கோடைமழை பெய்தது. அவ்வப்போது ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த நிலை காரணமாகவும் மழை பெய்தது. இதனால் கடந்த மார்ச் மாதத்தில் 4 அடியாக இருந்த சோலையார் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்திற்கு மாறாக மேமாதம் 28–ம் தேதி முதல் பெய்யத் தொடங்கியது. அதுவும் மிக கனமழையாக விடாமல் 20 நாட்களுக்கும் மேல் பெய்தது. இதனால் வால்பாறை சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக அக்காமலை புல்மேடு பகுதி, சின்னக்கல்லர், நீரார் பகுதிகளில் அதிகளவில் கனமழை பெய்தது.
இதனால் சோலையார் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து கொண்டே இருந்தது. தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக பரம்பிக்குளம் ஆழியார் திட்ட அடிப்படை அணையாக விளங்கும் சோலையார் அணை 4 ஆண்டுகளுக்குப் பிறகு முழு கொள்ளளவான 160 அடியை நேற்று அதிகாலை 3 மணிக்கு எட்டியது. சோலையார் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளாக உள்ள உருளிக்கல், மாணிக்கா, குரங்குமுடி, பன்னிமேடு, சேடல்டேம், பெரியார்நகர் ஆகிய எஸ்டேட் பகுதிகளை ஒட்டிய தேயிலைத்தோட்டங்கள் சோலையார் அணை தண்ணீரில் மூழ்கியுள்ளது.
சோலையார்அணை முழு கொள்ளளவை தாண்டி நிரம்பி வழியத் தொடங்கியதை அடுத்து அணையிலிருந்து சேடல்பாதை வழியாக தண்ணீர் வெளியேறத் தொடங்கியது. மதகு வழியாகவும் நிரம்பி வழிந்து வருகிறது. இந்த நிலையில் ஜூலை 1–ந்தேதி முதல் ஒப்பந்தப்படி கேரளாவிற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பதால் நேற்று காலை 6 மணிமுதல் சோலையார் மின்நிலையம்–2 இயக்கப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு 16 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. உற்பத்திக்கு பின்னர் வெளியாகும் தண்ணீர் கேரளாவிற்கு திறந்து விடப்பட்டு வருகிறது. சோலையார் அணை நிரம்பி வழிந்து சேடல்பாதை வழியாக தண்ணீர் செல்லத் தொடங்கியதும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மலர்தூவி தண்ணீரை பரம்பிக்குளத்திற்கு அனுப்பி வைத்து சேடல்டேம் பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு இனிப்புகளும் வழங்கினார்கள்.
வால்பாறை பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் சோலையார் அணையில் 25 மி.மீ. மழையும், வால்பாறையில் 7 மி.மீ. மழையும், சின்னக்கல்லாரில் 12 மி.மீ. மழையும், நீராரில் 16 மி.மீ. மழையும் பெய்துள்ளது. சோலையார் அணைக்கு வினாடிக்கு 1811.34 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சோலையார் அணையிலிருந்து மாற்றுப்பாதை வழியாக பரம்பிக்குளம் அணைக்கு 1014.81 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. சேடல் பாதை வழியாக 29.28 கனஅடி தண்ணீரும் பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது. சோலையார் மின்நிலையம்–2 இயக்கப்பட்டு சுமார் 400 கனஅடி தண்ணீர் கேரளாவிற்கு திறந்து விடப்பட்டு வருகிறது. சோலையார் அணையின் நீர்மட்டம் 160.23 அடியாக உள்ளது.
4 ஆண்டுகளுக்குப் பிறகு சோலையார்அணை நிரம்பியதால் அணையை பார்த்து ரசிப்பதற்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.