அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு தங்க நாணயம்-ரொக்கப்பரிசு கிராம மக்கள் சார்பில் வழங்கப்பட்டது


அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு தங்க நாணயம்-ரொக்கப்பரிசு கிராம மக்கள் சார்பில் வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 2 July 2018 4:30 AM IST (Updated: 2 July 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

திருச்சிற்றம்பலம் அருகே அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு தங்க நாணயம்- ரொக்கப்பரிசு கிராம மக்கள் சார்பில் வழங்கப்பட்டது.

திருச்சிற்றம்பலம்,

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ளது துலுக்கவிடுதி வடக்கு கிராமம். இங்கு அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து வந்தது. இதனால் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து கடந்த 1 மாதமாக கிராம மக்கள் வீடு, வீடாக சென்று பெற்றோர்களை சந்தித்து தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தினர். அதனை ஏற்று கொண்ட பெரும்பாலான பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன்வந்தனர்.

இதையடுத்து அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பேராவூரணி வட்டார தொடக்கக்கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் ( பட்டுக்கோட்டை) பாண்டியன் முன்னிலை வகித்தார். கோவிந்தராசு எம்.எல்.ஏ. மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் துலுக்கவிடுதி பள்ளி வளர்ச்சி கரங்கள் மற்றும் நேரு நற்பணி மன்றம், முன்னாள் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் இணைந்து 28 மாணவர்களுக்கு தலா 1 கிராம் தங்க நாணயம் வழங்கினர். பள்ளியின் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செந்தில்குமார் 28 மாணவர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் வழங்கினார். 57 மாணவர்களுக்கு இலவச பள்ளிச்சீருடைகளை பார்த்தசாரதி என்பவர் வழங்கினார்.

விழாவில், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரகலாதன், துணைத்தலைவர் துரைமாணிக்கம், கவுரவத்தலைவர் அண்ணா பரமசிவம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ஆனந்தி, பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் செல்வராசு, துணை தலைவர் மாரிமுத்து, அன்னையர் குழு தலைவி மகேஸ்வரி, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் வேலு, கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை துலுக்கவிடுதி வடக்கு கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர். முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியை வாசுகி நன்றி கூறினார். 

Next Story