திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் சிவாஜிகணேசன் சிலையை திறக்க தமிழகஅரசு அனுமதி அளிக்க வேண்டும்


திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் சிவாஜிகணேசன் சிலையை திறக்க தமிழகஅரசு அனுமதி அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 2 July 2018 4:30 AM IST (Updated: 2 July 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் சிவாஜிகணேசன் சிலையை திறக்க தமிழகஅரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று அகில இந்திய சிவாஜி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சாவூர்,

அகில இந்திய சிவாஜி மன்ற செயற்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மன்ற தலைவரும், சிவாஜி கணேசனின் மூத்த மகனுமான ராம்குமார் தலைமை தாங்கினார். இணை பொதுச் செயலாளர் நாகராஜன், துணைத் தலைவர் தியாகராஜன், மாநில செயலாளர் மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் குமார் வரவேற்றார்.

இதில் பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியன், மருதுமோகன் மற்றும் தங்கப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில், நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த தினத்தை அக்டோபர் 1-ந் தேதி அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் என்று சட்டசபையில் அறிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோருக்கும் சிவாஜி கணேசன் ரசிகர்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

அகில இந்திய சிவாஜி மன்றத்தின் சார்பில் திருச்சி பாலக்கரை ரவுண்டானாவின் மத்தியல் சிவாஜி கணேசன் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை திறக்க அனுமதி கேட்டு கடிதம் மூலம் தமிழகஅரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. சிவாஜிகணேசனின் 90-வது பிறந்த தினமான இந்த ஆண்டில் அவரது உருவ சிலையை திறக்க அனுமதி அளித்து தமிழகஅரசு உத்தரவிட வேண்டும்.

சென்னை அடையாறில் தமிழகஅரசால் திறக்கப்பட்ட மணி மண்டபத்தில் சிவாஜிகணேசனின் அரியவகை புகைப்படங்களை வைக்க வேண்டும். பொதுமக்களும், ரசிகர்களும் கண்டுகளிக்கும் வகையில் கலைக்கூடமாக அமைக்க வேண்டும். சிவாஜி கணேசனின் 90-வது பிறந்த தின விழா அக்டோபர் 1-ந் தேதி சென்னையில் சிறப்பாக கொண்டாடப்படும். அதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்னிசை கச்சேரி, பட்டிமன்றம், பாட்டு மன்றம், கவியரங்கம் போன்றவை நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படும். மேலும் விளையாட்டு போட்டிகள், வசனம் பேசுதல் என ஆண்டு முழுவதும் பிறந்த தினவிழா கொண்டாட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் மன்ற அமைப்பாளர்களை விரைவில் நியமிக்க மாவட்ட தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் புதுச்சேரி மாநில தலைவர் மாயன், கர்நாடக மாநில செயலாளர் ரவி, தஞ்சை மாவட்ட தலைவர்கள் நேரு, பாஸ்கர், மாவட்ட செயலாளர் விஜயன், திருச்சி மாவட்ட தலைவர் உறந்தை செல்வம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராஜசேகர், இசக்கிமுத்து மற்றும் அனைத்து மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தஞ்சை ராமநாதன் ரவுண்டானாவில் உள்ள சிவாஜி கணேசன் சிலைக்கு ராம்குமார் மாலை அணிவித்தார். 

Next Story