தமிழ்நாட்டில் 27 ஆண்டுகள் ஆட்சி நடத்தி சாதனை படைத்த அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது


தமிழ்நாட்டில் 27 ஆண்டுகள் ஆட்சி நடத்தி சாதனை படைத்த அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது
x
தினத்தந்தி 2 July 2018 4:30 AM IST (Updated: 2 July 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் 27 ஆண்டுகள் ஆட்சி நடத்தி சாதனை படைத்த அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

கிருஷ்ணகிரி,

தமிழகத்தில் ஏழ்மை குடும்பங்களில் பிறந்த பெண்கள் வறுமை காரணமாக திருமணமாகாமல் இருந்த நிலையில் அவர்களின் பெற்றோர் கவலையில் இருந்தனர். இதை கருத்தில் கொண்டு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை பெண்களுக்கு தனது சொந்த பணத்தில் திருமணத்தை நடத்தி வைத்தார்.

புராண காலத்தில் விஷ்ணுபகவான் எடுத்த அவதாரத்தை போன்று பொதுமக்களின் நலன் கருதி பல அவதாரங்களை எடுத்தவர் ஜெயலலிதா. அன்னை தெரசாவின் இதயத்தில் நீங்கா இடம் பெற்ற அவர் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை செயல்படுத்தினார். தற்போதைய முதல்- அமைச்சர் அந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

ஜெயலலிதா நம்மை விட்டு பிரிந்த போது சிலரது சதியால் பிளவு ஏற்பட்டது. ஆனால் லட்சக்கணக்கான தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் சதிகாரர்கள் ஓரம் கட்டப்பட்டு அ.தி.மு.க.வின் உண்மை விசுவாசிகள் ஒன்று சேர்ந்தோம். தமிழகத்தில் 27 ஆண்டு காலம் ஆட்சி நடத்தி சாதனை நிகழ்த்தியது அ.தி.மு.க. இயக்கம் ஆகும். இதை யாராலும் அசைக்க கூட முடியாது.

புதுமண தம்பதிகளுக்கு இந்த நேரத்தில் ஒரு குட்டிக்கதையை கூற விரும்புகிறேன். புதிதாக திருமணமான போது கணவன் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்தார். இதை மனைவி கேட்ட போது, ஒரு ஆடு வாங்க வேண்டும், மாமனாரிடம் பணம் பெற்று கொடு என்று கணவன் கூறினார். ஆட்டை வளர்த்து அது குட்டி போட்டால் அதை விற்று பசுமாடு வாங்குவதாகவும், இதன் மூலம் லாபம் கிடைப்பதோடு உடல்நிலை சரியில்லாமல் உள்ள தனது தந்தைக்கு பால் கொடுப்பதாகவும் கணவன் கூறினார்.

அப்போது மனைவி தனது தாய்க்கும் பால் கொடுக்க வேண்டும் என்றார். கோபமடைந்த கணவன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்குள் சண்டை ஏற்பட்டது. இதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர், பசு மாடு தனது தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து விட்டதால் இழப்பீடாக, 10 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கூறினார். தோட்டமே இல்லாமல் நஷ்ட ஈடு எப்படி கேட்கிறார் என கணவன் கேட்ட போது பசு மாடே இல்லாமல் எப்படி பாலுக்கு சண்டை போடுகிறீர்கள் என்று அவர் கேட்வே , கணவன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இதை தவிர்க்க புதிதாக திருமணம் ஆனவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story