மகாமாரியம்மன், பாவ நாராயண பெருமாள் கோவில்களில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்


மகாமாரியம்மன், பாவ நாராயண பெருமாள் கோவில்களில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 2 July 2018 4:00 AM IST (Updated: 2 July 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

இலந்தைகூடம், வேப்பந்தட்டையில் மகா மாரியம்மன், பாவ நாராயணபெருமாள் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே இலந்தைகூடம் கிராமம் இந்திரா நகரில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் விநாயகர், மகா காளியம்மன், பாலமுருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் சன்னதிகள் உள்ளன. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 29-ந் தேதி அனுக்ஞை, விநாயகர் வழிபாடு பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து 1, 2, 3 மற்றும் 4-ம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை 9 மணிக்கு மகாமாரியம்மன் கோவில் மற்றும் விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதிகளின் மூலஸ்தான விமான கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் குமரவேல், நீதிபதி ராஜசேகர் மற்றும் இலந்தைகூடம் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், நாட்டாண்மைகள், முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் பாவ நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள சுவாமிகள் மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னதிகள் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு வாஸ்து பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சஹஸ்ரநாம பாராயணம், லஷ்மி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாகசாலை பூஜைகள் நடந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதில் வேப்பந்தட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். 

Next Story