ஆட்டோவில் சென்ற ஆசிரியையிடம் 4 பவுன் நகை அபேஸ் 3 பெண்களுக்கு போலீசார் வலைவீச்சு


ஆட்டோவில் சென்ற ஆசிரியையிடம் 4 பவுன் நகை அபேஸ் 3 பெண்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 2 July 2018 3:45 AM IST (Updated: 2 July 2018 3:27 AM IST)
t-max-icont-min-icon

நல்லம்பள்ளி அருகே ஆட்டோவில் சென்ற ஆசிரியையிடம் 4 பவுன் நகையை அபேஸ் செய்த 3 பெண்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

நல்லம்பள்ளி,

தர்மபுரி பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் விமலா (வயது 54). இவர் நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். தனது தந்தை வீட்டில் இருந்து தினமும் பள்ளிக்கு சென்று வருகிறார்.

இவர் பள்ளிக்கு செல்வதற்காக தர்மபுரியில் இருந்து நல்லம்பள்ளிக்கு ஆட்டோவில் போய்க்கொண்டிருந்தார். அப்போது அதே ஆட்டோவில் மேலும் 3 பெண்களும் சென்றனர். கலெக்டர் குடியிருப்பு வளாகத்தை அடுத்த நிறுத்தம் வந்ததும் 3 பெண்களும் ஆட்டோவில் இருந்து இறங்கி சென்று விட்டனர். விமலா மட்டும் ஆட்டோவில் இருந்தார்.

சிறிதுதூரம் சென்றதும் விமலா பார்த்தபோது தான் அணிந்திருந்த 4 பவுன் நகையை காணாது திடுக்கிட்டார். அவருடன் ஆட்டோவில் பயணம் செய்த 3 பெண்களும் நைசாக நகையை அபேஸ் செய்தது தெரியவந்தது. இதுபற்றி அவர் அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விமலாவிடம் 4 பவுன் நகையை அபேஸ் செய்த 3 பெண்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story