நீட் தேர்வு வினாக்கள் எந்த அடிப்படையில் தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்படுகின்றன? சி.பி.எஸ்.இ.க்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி


நீட் தேர்வு வினாக்கள் எந்த அடிப்படையில் தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்படுகின்றன? சி.பி.எஸ்.இ.க்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 3 July 2018 5:22 AM IST (Updated: 3 July 2018 5:22 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வு வினாக்கள் எதன் அடிப்படையில் மொழி பெயர்க்கப்படுகின்றன என்று சி.பி.எஸ்.இ.க்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

மதுரை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை 24 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தமிழ் வழி வினாத்தாளை தேர்வு செய்து எழுதினார்கள். தமிழில் மொழி மாற்றம் செய்த வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன. எனவே அந்த வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க உத்தரவிட வேண்டும்“ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “போட்டி என்பது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்“ என்று கருத்து தெரிவித்தனர். பின்னர், “நீட் தேர்வு வினாக்கள் எந்த அடிப்படையில் ஆங்கில மொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது, எந்த பாடத்தொகுப்பில் இருந்து வினாக்கள் தேர்வு செய்யப்படுகின்றன. வினாக்களை தமிழில் மொழிபெயர்க்க எந்த அகராதி பயன்படுத்தப்படுகிறது. இதுபற்றிய தகவல்கள் தமிழ்வழி மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு விளக்க அறிவுரையாக வழங்கப்படுகிறதா?

மேலும் ஒரு குறிப்பிட்ட ஆங்கில வார்த்தையை தமிழ்-ஆங்கில இலக்கணப்படி எவ்வாறு மொழிபெயர்ப்பது, புரிந்து கொள்வது என்பது குறித்து தமிழ் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறதா?“ என்று கேள்வி எழுப்பினர்.

இந்த 4 கேள்விகளுக்கும் சி.பி.எஸ்.இ. பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கை வருகிற 6-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Next Story