வன்கொடுமை தடுப்பு சட்ட விவகாரம்: ரெயில் மறியல் போராட்டம் - 356 பேர் கைது


வன்கொடுமை தடுப்பு சட்ட விவகாரம்: ரெயில் மறியல் போராட்டம் - 356 பேர் கைது
x
தினத்தந்தி 3 July 2018 7:44 AM IST (Updated: 3 July 2018 7:44 AM IST)
t-max-icont-min-icon

வன்கொடுமை தடுப்பு சட்ட விவகாரம் தொடர்பாக நெல்லை மாவட்டத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 356 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை,

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்து போகச் செய்யும் உச்சநீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தை அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் இணைக்க வேண்டும்.

இந்த சட்டத்துக்காக உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நடந்த போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பல்வேறு அமைப்புகள் சேர்ந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை சந்திப்பில் நேற்று காலையில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக தீண்டமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் பல்வேறு அமைப்பினர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு திரண்டனர். அவர்கள் உள்ளே சென்று தூத்துக்குடி -திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயிலை மறிக்க முயற்சி செய்தனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை ரெயில் நிலையத்துக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். ஆனால் போராட்ட குழுவினர் ரெயில் நிலையத்துக்குள் நுழைவதற்கு முயன்றனர். அப்போது போலீசாருக்கும், போராட்ட குழுவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ஸ்ரீராம், சுடலைராஜ், ஜெயராஜ், ஆதித்தமிழர் பேரவை கலைக்கண்ணன், தமிழ்புலிகள் அமைப்பின் தமிழ்வளவன், திராவிடர் தமிழர் பேரவை கருமுகிலன் உள்ளிட்ட ஏராளமானவர்களை கைது செய்தனர். இதில் 27 பெண்கள் உள்பட 76 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

தென்காசி ரெயில் நிலையத்துக்கு வந்த செங்கோட்டை- நெல்லை ரெயிலை பல்வேறு கட்சியினர் வழிமறித்து போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேலுமயில், தமிழ் புலிகள் கட்சி குமார், ஆதி தமிழர் பேரவை கலிவருணன், தமிழர் விடுதலை கழகம் கட்டபொம்மன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் சந்திரன், சித்திக் உள்பட 91 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 2 பெண்களும் அடங்குவர்.

அம்பை ரெயில் நிலையத்தில் நடந்த ரெயில் போராட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கற்பகம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மாரிச்செல்வம், முத்துகிருஷ்ணன், லட்சுமி, பாக்யலட்சுமி, வசந்தி, மேனகா உள்பட 104 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 18 பேர் பெண்கள்.

சங்கரன்கோவிலில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பீர் மைதீன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். சங்கரன்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்த செங்கோட்டை- மதுரை பயணிகள் ரெயிலை மறித்தனர். போலீசாரின் தடையை மீறி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 85 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டத்தில் நெல்லை சந்திப்பு, தென்காசி, அம்பை, சங்கரன்கோவில் ஆகிய 4 இடங்களிலும் நடந்த ரெயில் மறியல் போராட்டத்தில் 356 பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story