பைகுல்லா சிறையில் இருந்து தப்பிஓடிய விசாரணை கைதி பிடிபட்டார்


பைகுல்லா சிறையில் இருந்து தப்பிஓடிய விசாரணை கைதி பிடிபட்டார்
x
தினத்தந்தி 3 July 2018 8:49 AM IST (Updated: 3 July 2018 8:49 AM IST)
t-max-icont-min-icon

பைகுல்லா சிறையில் இருந்து தப்பிஓடிய விசாரணை கைதியை கர்நாடகத்தில் வைத்து போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மும்பை,

மும்பை பாந்திரா ரெயில்வே போலீசார் கடந்த மே மாதம் 3-ந் தேதி ஒரு திருட்டு வழக்கில் ஆஷிப் மஜித் சேக்(வயது19) என்ற வாலிபரை கைது செய்து இருந்தனர். அவர் பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில், அவர் 5-ந்தேதி அன்று சிறையில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுபற்றி பைகுல்லா சிறை அதிகாரி தத்தாராய் கான்டேகர் நாக்பாடா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிஓடிய வாலிபரை வலைவீசி தேடிவந்தனர்.

இந்தநிலையில், அவர் தனது சொந்த ஊரான கர்நாடகத்தின் பீதர் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று உள்ளூர் போலீசார் உதவியுடன் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவர் மும்பைக்கு கொண்டு வரப்பட்டார். விசாரணையில், திருட்டு வழக்கில் பிடிபட்ட போது அவர் தனது பெயரை மாற்றி கூறி உள்ளார். அவரது உண்மையான பெயர் சோயிப் சாகிர் சேக் என்பது தெரியவந்தது.

Next Story