நாகர்கோவிலில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட 2 வீடுகளுக்கு ‘சீல்’ வைப்பு


நாகர்கோவிலில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட 2 வீடுகளுக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 4 July 2018 4:30 AM IST (Updated: 3 July 2018 10:57 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் திருச்செந்தூர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட 2 வீடுகளுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது. காலிமனை ஒன்றும் கையகப்படுத்தப்பட்டது. அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டபோது இந்து இயக்க நிர்வாகி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் பறக்கை ரோட்டில் பைத்துல்மாநகர் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு சொந்தமான 1 ஏக்கர் 75 சென்ட்  இடம் உள்ளது. இந்த இடத்தில் ஏராளமானோர் பெரிய– பெரிய காங்கிரீட் வீடுகளை கட்டி குடியிருந்து வருகிறார்கள். வீடுகள் கட்டி குடியிருப்பவர்களில் பலர் கோவிலுக்கு வாடகை செலுத்தாமல் குடியிருந்து வருவதாக கூறப்படுகிறது. ஒரு சென்டுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் நிர்ணயம் செய்திருப்பதால் அவ்வளவு தொகையை தங்களால் கட்ட இயலாது என்று அப்பகுதியில் உள்ளவர்கள் கூறி வந்ததாக தெரிகிறது.

இதுதொடர்பாக நெல்லையில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் கோர்ட்டில் 55 பேர் மீது வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் காலத்திலேயே சிலர் வேறு நபர்களுக்கு காலிமனைகளை, கட்டிய வீடுகளை விற்பனை செய்துள்ளனர். அவ்வாறு வாங்கியவர்களில் பலர் இந்த இடம் கோவிலுக்கு சொந்தமான இடம் என்பதுகூட தெரியாமல் வாங்கியுள்ளனர்.

இந்தநிலையில் நெல்லை இணை ஆணையர் கோர்ட்டில் நடந்து வந்த 55 பேரின் வழக்குகளில் 3 பேருடைய வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில் வாடகை செலுத்தாதவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை கையகப்படுத்தி, சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகத்தின்கீழ் கொண்டுவர உத்தரவிடப்பட்டது. அதன்பிறகு மேல்முறையீடு செய்ய 90 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த காலமும் முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் வீடுகளையும், மனைகளையும் காலி செய்யும்படியும், அவ்வாறு காலி செய்யாத பட்சத்தில் பூட்டி ‘சீல்‘ வைக்கப்படும் என்றும் நோட்டீஸ் கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது.

அதன்படி நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் இணை ஆணையர் பாரதி தலைமையில், நாகர்கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரத்தினவேல்பாண்டியன் மற்றும் அதிகாரிகள் பைத்துல்மாநகருக்கு சென்றனர். ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி தலைமையில், சப்–இன்ஸ்பெக்டர் அருளப்பன் மற்றும் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை போலீசார், பயிற்சி போலீசார் என ஏராளமானோர் அங்கு குவிக்கப்பட்டனர்.

முதலில் செல்லம்மாள் என்பவரின் வீட்டுக்கு ‘சீல்‘ வைக்க அதிகாரிகள் சென்றனர். இந்து மகாசபா கட்சியின் நிர்வாகியான சுரேஷ் என்பவரின் தாயார்தான் செல்லம்மாள் ஆவார். சுரேஷ் தனது பெற்றோருடன் அந்த வீட்டில் வசித்து வந்தார். அதிகாரிகள் வீட்டை ‘சீல்‘ வைக்கச் சென்றபோது சுரேசும் அங்கிருந்தார். அதிகாரிகள் வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் எடுத்துச் செல்லுங்கள், கோர்ட்டு உத்தரவுப்படி வீட்டை பூட்டி சீல் வைக்கப்போகிறோம் என்று கூறினர். இதனால் அதிகாரிகளுக்கும், சுரேசுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ், வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தன்மீது ஊற்றி தற்கொலை செய்ய முயன்றார். சுதாரித்துக்கொண்ட போலீசாரும், அதிகாரிகளும் சுரேசிடம் இருந்த மண்எண்ணெய் கேனை வாங்கி, அவரை மீட்டு வீட்டுக்கு வெளியே அழைத்துச் சென்று அமர வைத்தனர். அப்போது அவரது தாயார் சத்தம்போட்டு அழுதார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் வீட்டில் உள்ள பொருட்களை அவர்கள் அகற்ற மறுத்ததால் அதிகாரிகள் அந்த வீட்டின் கதவுகளை பூட்டி ‘சீல்‘ வைத்துவிட்டு, வெளிப்புற கேட்டையும் பூட்டி ‘சீல்‘ வைத்தனர்.

அதன்பிறகு அதே பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிட தொழிலாளி பகவதி என்பவரின் வீட்டையும் பூட்டி ‘சீல்‘ வைத்தனர். அந்த வீட்டில் உள்ள வாலிபருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. புதுமண தம்பதி வெளியேற்றப்பட்டு, வீட்டில் உள்ள கியாஸ் அடுப்பு, சிலிண்டர் உள்ளிட்ட முக்கியப் பொருட்களை அதிகாரிகள் அகற்றச்செய்து வீட்டை பூட்டி ‘சீல்‘ வைத்தனர். அந்த வீட்டில் இருந்த மூதாட்டிகள் 2 பேரின் வீடு ‘சீல்‘ வைக்கப்பட்டதால் அழுது புரண்டது பரிதாபத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

இந்த வீட்டின் அருகாமையில் உள்ள காலிமனையை சுற்றிலும் அதிகாரிகள் பிளாஸ்டிக் கயிறு கட்டி வேலி அமைத்ததோடு இந்த இடம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமானது என்ற அறிவிப்பு பலகை அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

இவ்வாறு இந்த பகுதியில் 2 வீடுகள் பூட்டி ‘சீல்‘ வைக்கப்பட்டதாலும், ஒரு காலி மனை கையகப்படுத்தப்பட்டதாலும் அதேபகுதியில் கோவில் நிலத்தில் வீடு கட்டி குடியிருப்பவர்களிடையே இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே அப்பகுதியை சேர்ந்த ஆண்களும், பெண்களும் அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் சிலரும் அதிகாரிகளிடம் பேசினர்.

இதுதொடர்பாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் பாரதி கூறியதாவது:–

கோர்ட்டு உத்தரவின்பேரில்தான் இன்று (அதாவது நேற்று) 2 வீடுகளை பூட்டி சீல்வைத்தும், காலிமனையை கையகப்படுத்தியும் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். வழக்கு முடிந்து 90 நாட்கள் மேல்முறையீடு செய்ய காலஅவகாசம் கொடுத்தும் சீல்வைக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள் வாடகை செலுத்தவோ, மேல்முறையீடு நடவடிக்கைகள் எடுக்கவோ முன்வரவில்லை. அதன்பிறகு 15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்கப்பட்ட பிறகும் அவர்கள் வாடகை செலுத்த முன்வரவில்லை. ஐகோர்ட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் கண்டிப்பாக இருந்து வருகிறது. அதனால் 15 நாட்களுக்கு ஒருமுறை ஐகோர்ட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட விவரங்களை இந்துசமய அறநிலையத்துறை சார்பில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டி இருப்பதால் நாங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது. இதேநிலம் தொடர்பாக 15 நாட்களில் மேலும் 30 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். சீல் வைக்கப்பட்ட வீடுகளைச் சேர்ந்தவர்கள் இந்துசமய அறநிலையத்துறை ஆணையரை சந்தித்து வாடகை செலுத்த சம்மதித்து, அனுமதி பெற்று வந்தால் மட்டுமே சம்பந்தப்பட்டவர்களிடம் வீடுகளை நாங்கள் ஒப்படைக்க முடியும்.

சீல் வைக்கப்பட்ட 2 வீடுகள் மற்றும் கையகப்படுத்தப்பட்ட காலிமனை ஆகியவற்றின் மொத்த பரப்பு 8½ சென்ட். இவற்றின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story