26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம் பணிகள் பாதிப்பு


26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம் பணிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 4 July 2018 4:15 AM IST (Updated: 4 July 2018 12:17 AM IST)
t-max-icont-min-icon

26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கீழையூரில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி புரியும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 26 அம்க கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். இரவு நேரங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்துவதையும், விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதையும் நிரந்தரமாக நிறுத்த வேண்டும். பல மாவட்டங்களில் ஊழியர்களை எந்தவித விளக்கமும் கேட்காமல் பணியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கணினி உதவியாளர்களுக்கும், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் களுக்கும் குடும்ப பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த ரூ.60-ஐ ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும்.

ஊராட்சி ஒன்றியங்களின் புதிய கணினி உதவியாளர் பணியிடம் உருவாக்க வேண்டும். முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும். சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு அளவீடு மதிப்பு ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர் களுக்கு பாரபட்சமற்ற முறையில் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

ஊராட்சி செயலாளராக பணியாற்றி 2003-ம் ஆண்டுக்கு முன்பு பதவி உயர்வு பெற்ற அனைவருக்கும் முந்தைய பணி காலத்தில் 50 சதவீத பணிக்காலத்தை ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். பொறியாளர்கள் அனைவருக்கும் சம வேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும். கோட்ட வளர்ச்சி அலுவலகத்தை மீண்டும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. வேலை நிறுத்தப்பட்ட போராட்டம் காரணமாக கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அலுவலர்கள் யாரும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டது. 

Next Story