ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் யூனியன் அலுவலகங்கள் வெறிச்சோடின
கோவில்பட்டி, தருச்செந்தூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள பல்வேறு யூனியன்களில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி, தருச்செந்தூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள பல்வேறு யூனியன்களில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். இதனால் யூனியன் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
கோவில்பட்டிபஞ்சாயத்து செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். அதிகாரிகள் இரவு நேரங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்துவதையும், விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதையும் நிரந்தரமாக நிறுத்த உத்தரவு வெளியிட வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசாணை எண் 56–யை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
இதனால் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் பணியாற்றும் 58 ஊழியர்களில் 17 பேர் மட்டுமே பணிக்கு வந்தனர். யூனியன் ஆணையாளர்கள் முருகானந்தம், கிரி உள்ளிட்ட 41 பேர் பணிக்கு வரவில்லை.
கயத்தாறுகயத்தாறு யூனியன் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலக உதவியாளர் தவிர மற்ற அனைவரும் பணிக்கு வரவில்லை. இதனால் கயத்தாறு யூனியன் அலுவலகம் வெறிச்சோடியது. விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்தில் பணியாற்றும் 48 பேரில் 10 பேர் பணிக்கு வரவில்லை. மற்ற 38 பேர் பணிக்கு வந்தனர்.
திருச்செந்தூர் யூனியன் அலுவலகத்தில் பணியாற்றும் 34 பேரில் 10 பேர் பணிக்கு வந்தனர். மற்ற 24 பேர் பணிக்கு வரவில்லை. தென்திருப்பேரையில் உள்ள ஆழ்வார்திருநகரி யூனியன் அலுவலகத்தில் பணியாற்றும் 38 பேரில் 19 பேர் பணிக்கு வந்தனர். மற்றவர்கள் பணிக்கு வரவில்லை. இதேபோன்று சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் யூனியன் அலுவலகங்களிலும் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.