ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 4 July 2018 5:00 AM IST (Updated: 4 July 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடின.

ஊட்டி, 

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்பது உள்பட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் நேற்று பணிக்கு வராமல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊராட்சி செயலர்களுக்கு அரசு ஏற்றுக்கொண்ட பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர், குந்தா ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும், ஒன்றிய பணி மேற்பார்வையாளருக்கு அளவீடு மற்றும் மதிப்பீடு ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும், கணினி உதவியாளர்களுக்கும், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளருக்கும் பாரபட்சமற்ற முறையில் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும், வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், இளநிலை பொறியாளர்களுக்கும் முறையான ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும், ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.

ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு அலுவலர்கள் பணிக்கு வராததால், அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் கிராம ஊராட்சி பிரிவு, வளர்ச்சி பிரிவு உள்ளிட்ட பிரிவு அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தன. நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஊரக வளர்ச்சி முகமை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடின.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.

Next Story