வக்கீல்களுக்கு சேமநல நிதி ரூ.7 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் நாராயணசாமி அறிவிப்பு


வக்கீல்களுக்கு சேமநல நிதி ரூ.7 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் நாராயணசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 4 July 2018 4:15 AM IST (Updated: 4 July 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரி வக்கீல்களுக்கு சேமநல நிதி ரூ.7 லட்சமாக உயர்த்தி வழங்கப் படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி வக்கீல்கள் சங்கம் சார்பில் மறைந்த வக்கீல்கள் குடும்பத்தினருக்கு சேமநலநிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை நீதிபதி தனபால் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு, மறைந்த வக்கீல்கள் கண்ணன், பாலசுப்பிரமணியன், தணிகைவேல், ராஜ கோபால் ஆகியோரின் குடும்பத்தினருக்கு வக்கீல்கள் சேமநல நிதி தலா ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

நிகழ்ச்சியில் புதுவை தலைமை நீதிபதி தனபால் பேசியதாவது:-

தமிழகத்தில் வக்கீல்களுக்கு சேமநல நிதி ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டு உள்ளது. புதுச்சேரியில் வழங்கப்பட்டு வரும் நிதியை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்த வேண்டும்.

தமிழகத்தில் நீதிபதி பணியிடங்களுக்கு விண்ணப்பம் பெறப்பட்டு தேர்வு நடந்து உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியாகும். அதற்கான நடவடிக்கைகளை சென்னை ஐகோர்ட்டு எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் வெளிப்படையாக முதல்- அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. மூத்த வக்கீல்கள் வாதாடும் நுணுக்கங்களை தெரிந்துகொள்ள வேண்டும். வக்கீல் தனது வாத திறமையால் நீதிபதியின் கவனத்தை ஈர்க்க வேண்டும். இதனை பின்பற்றினால் வக்கீல் தொழிலில் ஜொலிக்க முடியும்.

புதுச்சேரி மாநிலத்தில் ஐகோர்ட்டு கிளை அமைக்க வேண்டும் என சென்னை தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளேன். நேரில் சந்தித்தும் வலியுறுத்தி உள்ளேன். புதுச்சேரி வக்கீல்கள் சேமநல நிதிக்கு கடந்த ஆண்டு ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் ரூ.20 லட்சம் வழங்கப்படும். தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரி வக்கீல்களுக்கு சேமநல நிதி ரூ.7 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி முன்னாள் சட்டத்துறை செயலர் செந்தில்குமார் மற்றும் நீதி பதிகள், அரசு வக்கீல்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story