தக்கலை அருகே பத்மநாபபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து


தக்கலை அருகே பத்மநாபபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து
x
தினத்தந்தி 5 July 2018 4:15 AM IST (Updated: 4 July 2018 10:58 PM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே பத்மநாபபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது. இதனை தீயணைப்புத்துறையினர் அணைத்தனர்.

பத்மநாபபுரம்,

பத்மநாபபுரம் நகராட்சி குப்பை கிடங்கு தக்கலை அருகே திற்பரப்பு அருவி சாலையில் மருந்துக்கோட்டை பகுதியில் உள்ளது.

பத்மநாபபுரம் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்படுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று காலை இந்த குப்பை கிடங்கில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அப்போது அந்த பகுதியில் பலத்த காற்று  வீசியதால் தீ வேகமாக பரவியது.

இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் மற்றும் திற்பரப்பு செல்லும் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.

உடனே இதுபற்றி தக்கலை தீயணைப்பு நிலையத்திற்கும், பத்மநாபபுரம் நகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர்(பொறுப்பு) தேவராஜ் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று சுமார் 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

நகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:–

 இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீவிபத்து ஏற்பட்டு புகைமூட்டம் ஏற்படுவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து அவற்றை மறுசுழற்சி செய்ய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story