ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம் அலுவலகங்கள் வெறிச்சோடின


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம் அலுவலகங்கள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 5 July 2018 4:15 AM IST (Updated: 5 July 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடின.

பெரம்பலூர்,

ஊராட்சி செயலாளர்களுக்கு, பதிவுரு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். இரவு நேரங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்துவதையும், விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதையும் நிரந்தரமாக நிறுத்த உத்தரவிட வேண்டும். பல மாவட்டங்களில், எவ்வித விளக்கமும் கோராமல் ஊழியர்களை பணியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும். காலிப்பணி இடங்களை நிரப்பிட வேண்டும். தனி நபர் இல்லக் கழிவறைக்கு வழங்கும் மானியத்தொகையை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் ஆகியவை உள்பட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

இந்த வேலைநிறுத்த போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முதல் ஊராட்சி செயலாளர்கள் வரை நேற்று 2-வது நாளாக காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் யாரும் பணிக்கு செல்லாததால் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அலுவலகம் உள்பட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை செய்யும் பல்வேறு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இன்று (வியாழக்கிழமை) காலை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.


Next Story