தீ விபத்து: 4 கடைகள்-2 வீடுகள் எரிந்து சாம்பல் ரூ.15 லட்சம் பொருட்கள் நாசம்


தீ விபத்து: 4 கடைகள்-2 வீடுகள் எரிந்து சாம்பல் ரூ.15 லட்சம் பொருட்கள் நாசம்
x
தினத்தந்தி 5 July 2018 4:30 AM IST (Updated: 5 July 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டை தர்கா அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 4 கடைகள், 2 வீடுகள் எரிந்து சாம்பல் ஆனது. ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமானது.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை தர்கா அருகே ஏராளமான கடைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று மதியம் செல்லப்பா என்பவரது மளிகை கடை அருகே உள்ள மின் கம்பத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக மளிகை கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த நேரத்தில் தீயணைப்பு வாகனம் எடையூர் அருகே ஏற்பட்ட தீ விபத்துக்கு சென்று இருந்தது. உடனடியாக தீயை அணைக்கும் பணியில் அப் பகுதி மக்கள் ஈடுபட்டனர். இருப்பினும் தீ மள, மளவென அருகில் உள்ள கடைகள் மற்றும் குடியிருப்புகளுக்கும் பரவியது.

இந்த நிலையில் எடையூர் தீ விபத்திலிருந்து திரும்பி வந்து முத்துப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர்(பொறுப்பு) நெடுஞ்செழியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. உடனடியாக பேரூராட்சி மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் தண்ணீர் எடுத்து வரப்பட்டன.

இந்த தீ விபத்தில் செல்லப்பாவின் மளிகை கடை, சேக் முகமதுவின் ஓட்டல், ஜக்கிரியாவின் மளிகை கடை, நிசார் அகமதின் பேன்சி ஸ்டோர், ஜெய்னுல் ஆப்தீன் மற்றும் அகமது மைதீன் என்பவரின் 2 வீடுகள் ஆகியவை தீயில் எரிந்து சாம்பல் ஆனது. இந்த தீவிபத்தில் கடைகள் மற்றும் வீடுகளில் இருந்த பொருட்கள், ஆவணங்கள் எரிந்து நாசமானது. சேத மதிப்பு ரூ.15 லட்சம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிபத்து நடந்த பகுதியை தர்கா முதன்மை அறங் காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹீப், வர்த்தக கழக தலைவர் மெட்ரோமாலிக் ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும் வருவாய் ஆய்வாளர் தங்கதுரை மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். 

Next Story