கிணற்றில் தவறி விழுந்து இறந்த கன்றுக்குட்டியின் உடலை எடுக்க விடாமல் பாசப்போராட்டம் நடத்திய நாய்


கிணற்றில் தவறி விழுந்து இறந்த கன்றுக்குட்டியின் உடலை எடுக்க விடாமல் பாசப்போராட்டம் நடத்திய நாய்
x
தினத்தந்தி 5 July 2018 4:15 AM IST (Updated: 5 July 2018 3:23 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்து இறந்த கன்றுக்குட்டியின் உடலை எடுக்க விடாமல் நாய் ஒன்று பாசப்போராட்டம் நடத்திய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த எருதிகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னதுரை. விவசாயியான இவர், தன்னுடைய வீட்டில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருவதுடன், நாயும் வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வந்த கன்றுக்குட்டி ஒன்று பிறந்தது முதல் (தற்போது 6 மாதம்) நாயுடன் தான் எப்போதும் வலம் வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை அருகில் உள்ள சுமார் 25 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் அந்த கன்றுக்குட்டி தவறி விழுந்தது. இதனை மற்றவர்கள் அறியாத நிலையில் நாய் பார்த்து விட்டு கிணற்றின் அருகே சென்று குரைத்துக்கொண்டே இருந்தது. சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் கிணற்றுக்கு சென்று பார்த்தபோது, அதில் கன்றுக்குட்டி விழுந்து கிடப்பது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்த மணப்பாறை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கினர். அப்போது அந்த கன்றுக்குட்டி கிணற்றுக்குள் இறந்து கிடந்தது. அந்த கன்றுக்குட்டியை கயிற்றால் கட்டி மேலே தூக்கி வந்தனர். கன்றுக்குட்டியின் உடலை நாய் சுற்றி, சுற்றி வந்து தன் நாக்கால் அதன் முகத்தை வருடியது. கன்றுக்குட்டியின் அசைவற்ற உடலை பார்த்ததும் சிறிது நேரத்தில் நாயின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது.

பின்னர், இறந்த கன்றுக்குட்டியின் உடலை எடுத்துச் சென்று புதைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்போது அந்த நாய் கன்றுக்குட்டியின் உடலை எடுக்க விடாமல் சுற்றி, சுற்றி வந்தது. நாயின் இந்த பாசப்போராட்டத்தால் அங்கிருந்தவர்களின் கண்களும் குளமாகியது. இதையடுத்து அந்த நாயை வேறு இடத்துக்கு அழைத்து சென்ற பின்னர் கன்றுக்குட்டியின் உடலை புதைத்தனர். 

Next Story