சென்னிமலை அருகே பஞ்சு அரவை மில்லில் பயங்கர தீ விபத்து
சென்னிமலை அருகே பஞ்சு அரவை மில்லில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பஞ்சு பண்டல்கள் எரிந்து நாசம் ஆனது.
சென்னிமலை,
சென்னிமலை அருகே உள்ள முகாசிபிடாரியூர் ஊராட்சி சக்தி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 65). இவர் கடந்த 5 ஆண்டுகளாக சென்னிமலை அருகே அம்மாபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான ஒரு குடோனில் பஞ்சு அரவை மில் நடத்தி வருகிறார்.
இதன் மூலம் திருப்பூர் பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களில் இருந்து கழிவுகளை வாங்கி வந்து அதனை எந்திரம் மூலம் பிரித்தெடுத்து பஞ்சுகளாக மாற்றி விற்பனை செய்து வருகிறார். நேற்று வழக்கம்போல் குடோனில் 6 தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தார்கள்.
இந்த நிலையில் மதியம் 12.30 மணி அளவில் திடீரென அரவை எந்திரத்தில் தீப்பொறி வந்ததால் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென பரவி பஞ்சு பண்டல்கள் மீது பிடித்தது.
இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தார்கள். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அணைக்க முடியவில்லை.
இதுபற்றி சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்கள். அதைத்தொடர்ந்து தீயணைப்பு நிலைய அதிகாரி கணேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் ஏராளமான பண்டல்கள் முழுமையாக தீயில் எரிந்து நாசம் ஆனது. மேலும் அரவை எந்திரங்களும் சேதம் அடைந்தன.
இவற்றின் சேத மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story