மக்கள் ஊர்வலமாக சென்ற சாலையில் இருந்த கடைகள் விவரம் சேகரிப்பு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மக்கள் ஊர்வலமாக சென்ற சாலையில் இருந்த கடைகள் விவரங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்து உள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மக்கள் ஊர்வலமாக சென்ற சாலையில் இருந்த கடைகள் விவரங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்து உள்ளனர்.
துப்பாக்கி சூடுதூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22–ந்தேதி கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜா தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அனில்குமார், கலிமுல்லாஷா, ரமேஷ்பாபு, சரவணன், விஜயராகவன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்குகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு ஆவணங்களை சேகரித்து உள்ளனர். அதன் அடிப்படையில் சாட்சிகளிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களை வரவழைத்து விசாரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடைகள் விவரம்அதே நேரத்தில், கடந்த மே மாதம் 22–ந்தேதி மக்கள் பனிமயமாதா ஆலயத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்ற சாலையின் இருபுறங்களிலும் இருந்த கடைகளின் விவரம், உரிமையாளர்கள் விவரங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்து உள்ளனர். இதில் சுமார் 350–க்கும் மேற்பட்ட கடைகள் விவரம் சேகரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஊர்வலத்தின்போது ஏதேனும் கடைகள் திறந்து இருந்ததா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளது.